பாகுபலி – விமர்சனம் (Bahubali – Review) டெக்னிக்கல் மிரட்டல்… திரைக்கதை தடங்கல்

Baahubali_poster

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)மொழியைத் தாண்டி ரசிக்கக்கூடியது சினிமா. அதனால்தான் ராஜமெளலி எந்த ஊர்க்காரர் என்பதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தமிழ் ரசிகர்களும் அவரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறார்கள். மஹாதீரா,  நான் ஈ பட வரிசையில் அகில இந்திய அளவில் மாபெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி, முக்கால் கிணறுதான் தாண்டியிருக்கிறது. ஆனாலும் டெக்னிக்கலாக மிரட்டி… ரசிகனை திறந்த வாய் மூடாமல் பார்க்க வைத்திருக்கிறார்.

இதுவரை கற்பனை கதைகளை மட்டுமே இயக்கிவந்த மெளலி, முதன்முறையாக வரலாற்றுக் கதையைத் தொட்டிருக்கிறார். ஜைன மதத்தின் தொடக்கம் என்பது முழு வரலாறாக பதிவு செய்யப்படாத காற்றுவழிச் செய்தி என்பதால், பாகுபலி வரலாற்றில் தன்னுடைய காதல் கதையை இடைச்செருகலாக நுழைத்து சுவாரஸ்யம் காட்டியிருக்கிறார்.

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)ஒவ்வொரு ஜேம்ஸ்பாண்ட் படங்களின் ஆரம்பத்திலும் இடம்பெறும் 10 நிமிட காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்துவிடும். அப்படித்தான் அதிரடியாக தொடங்குகிறது படம். அரச வாரிசு பாகுபலியை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் நோக்கத்தில், உயிரைக் கையில் பிடித்தபடி ஓடிவருகிறார் ரம்யா கிருஷ்ணன். (அபாகலிப்டோ படத்தில் உயிர் பிழைக்க ஓடுபவர்களின் காட்சியை அச்சுஅசலாக நினைவுபடுத்துவது வேறு விஷயம்) முதுகில் அம்புடன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிர் விடும் நேரத்தில், அந்தப் பிள்ளையைக் காப்பாற்றும் பொறுப்பை இறைவனிடம் ஒப்படைக்கிறாள். பிள்ளை வளர்ந்தவுடன் செல்லவேண்டிய திசையையும் காட்டியபடி  மரணத்தைத் தொடுகிறார்.

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)அந்தக் குழந்தைதான் பிரபாஸ். நீர் வீழ்ச்சியின் உச்சியில் என்ன இருக்கிறது என்றே பார்த்தேயறியாத மலைவாழ் மக்களிடையே காட்டுவாசியாக, முரட்டுக் குதிரையாக வளர்கிறான். எப்படியும் மலை மீது ஏறி மேலே போய், நீர் வீழ்ச்சியின் தொடக்கத்தைப் பார்க்க விரும்புகிறான். மலையில் ஏறும் முயற்சி தோல்வியடையும் ஒவ்வொரு நேரத்திலும் அவனுக்குத் தூண்டுதலாக தெரிகிறது தமன்னாவின் முகம். அந்த மலையின் தேவதையாகவே அவளைப் பார்க்கிறான். நிஜமாகவே தேவதையைப் போல் ஜொலிக்கிறார் தமன்னா. இத்தனை அழகை எங்குதான் ஒளித்து வைத்திருந்தாரோ? ஒரு வழியாக அந்த மலை உச்சியை அடைந்தால்… அங்கே மகில்மதி என்று ஒரு நாடு இருக்கிறது. அராஜகன் ராணாவின் ஆட்சி நடக்கிறது. மக்கள் அடிமைகளாக தவிக்கிறார்கள்.

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)ராணாவின் அறிமுக காட்சி இதுவரை இந்தியத் திரையுலகம் காணாத அதிரடி. ஒரு வில்லனை சரியாக படைப்பதுதான் கமர்ஷியல் சினிமாவின் வெற்றி இலக்கணம் என்பதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார் ராஜமெளலி. உயரமும், பார்வையும் ராணாவுக்கு தனி மரியாதை கொடுக்கிறது.

அனுஷ்கா பரிதாபம். ‘என்னுடைய மகன் பாகுபலி இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வருவான் என்று வயதான கோலத்தில் இரும்புச்சங்கிலியுடன் அடிமைத்தாயாக கொந்தளிக்கிறார் அனுஷ்கா. இப்போது அனுஷ்கா இயல்பாகவே வயதான கோலத்தில்தான் இருக்கிறார் என்பதால், மேக்கப் இல்லாத கோலம் அத்தனை அதிர்ச்சியாக இல்லை. ‘உன் மகனை திரும்பவும் பார்க்கும் உன் ஆசை நிறைவேறப்போவதில்லை, மீண்டும் ஒரு முறை அவனை கொல்லவேண்டும் என்ற என் ஆசையும் நிறைவேறப்போவதில்லை’ என்று ராணா மிரட்டும் நேரத்தில் புயல் மாதிரி வருகிறார் பிரபாஸ்.

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)பாகுபலி என்று மக்கள் அவனை வரவேற்கிறார்கள். அடிமை ஆட்சியை ஒழிக்கவந்த புரட்சியாளனாக பார்க்கிறார்கள். தங்களை காப்பாற்றும் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் அவனோ ராணாவை எதிர்க்கும் புரட்சித் தளபதியாக இருக்கும் தமன்னாவின் ஜொள்ளு ரசிகனாக இருக்கிறான். அழகு தேவதையை கைப்பிடிக்க வேண்டுமென்றால் போரில் பங்கேற்க வேண்டும் என்றதும் நிலைமை மாறுகிறது. தமன்னாவுடன் சேர்ந்து ராணாவுடன் மோதத்தொடங்குகிறான். மக்களை கேடயமாக பயன்படுத்தி வெற்றிகொள்ளத் துடிக்கிறான் ராணா. அந்த முயற்சியை முறியடித்து பிரபாஸ் எதிர்த்து வெல்ல முடிகிறதா என்பதுதான் பாகுபலி. இந்த போர்க் காட்சிகள், ‘லார்டு ஆஃப் த ரிங்க்ஸ்’, ‘300’  படங்களை ஞாபகப்படுத்தினாலும் ’இது நம்ம ஆளு படம்’  என்பதால் பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

பாகுபலி - விமர்சனம் (Bahubali - Review)

சத்யராஜ், நாசர், ரோகிணி, ரம்யாகிருஷ்ணன் என்று நமக்குத் தெரிந்த ஆட்கள் இருந்தாலும் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வு வருவது ராஜமெளலியின் வெற்றிதான். ஒரு இடத்தில்கூட கிராபிக்ஸ் காட்சிகள் நெருடவில்லை என்பது கூடுதல் பிளஸ். ஆங்கிலப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு டெக்னிக்கல் விஷயங்களில் புகுந்து விளையாடி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

டெக்னிக்கலாக மிரட்டியிருந்தாலும், இதுவரையிலும் ராஜமெளலி படங்களில் இருந்த கச்சிதமான திரைக்கதை அமைப்பும், உணர்வுபூர்வமான காட்சிகளும் இந்தப் படத்தில் மிஸ்ஸிங். பின்னணி இசையில் மெய் மறக்கும் அளவுக்கு மரகதமணியின்  பாடல்களை ரசிக்க முடியவில்லை. 20 வருடங்களுக்கு முந்தைய சிரஞ்சீவி டைப் மசாலா படத்துக்கு கிராபிக்ஸ் தங்கமுலாம் பூசி ஜெயிக்க வைத்திருக்கிறார் ராஜமெளலி. ஆரம்ப காட்சிக்குப் பிறகு நொண்டி நொண்டி படம் நகர்ந்தாலும் இறுதிக் காட்சி கச்சிதமாக செதுக்கப்பட்டிருப்பதால் மாபெரும் வெற்றியை மீண்டும் தொட்டுவிட்டார்.

ஒட்டுமொத்த கதையம்சத்தைப் பொறுத்தவரை ‘டென் கமான்மெண்ட்ஸ்’ படம் பார்க்கும் உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படி சின்னச்சின்னதாக நிறையவே குறைகள் இருந்தாலும் அடுத்த பாகம் எப்போது என்று கேட்கத் தூண்டுகிறது. அதேநேரம் அடுத்த பாகத்தில் முழுசாக அனுஷ்கா மட்டும்தான் இருப்பாரோ என்ற பயமும்  வருகிறது.

ராஜமெளலி ரசிகர்களின் மதிப்பெண் : 68

சினிமா ரசிகர்களின் மதிப்பெண்            : 56

பின்குறிப்பு :

அழகு தேவதை தமன்னாவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு 110 மதிப்பெண்கள் போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

Bahubali, Bahubali Review, Rajamouli, SS Rajamouli, Prabhas, Rana, Rana Daggubati, Tamannaah, Anushka Shetty, Ramya Krishnan, Nassar, Sathyaraj, Adivi Sesh, Tanikella Bharani, Sudeep, MM Keeravani, Sabu Cyril, V Srinivas Mohan, epic, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 291 times, 12 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>