காற்றில் கரைந்த இசை – ஜேம்ஸ் ஹார்னெர்

James Horner small

டைட்டானிக் கப்பலின் நுனிமுனியில் ஏறிநின்று ஜாக் – ரோஸ் இருவரும் பறவையைப் போல் கைகளை நீட்டியதும் ஒரு இசை ஜில்லென்று வருடிச்செல்லும்… படம் பார்க்கும் ஒவ்வொருவரும் பறப்பதுபோலவே இருக்கும். காற்றை கிழித்துச்செல்லும் அந்த இசை இப்போதும் உங்கள் காதில் ஒலிக்கிறதா…

ரோஸை பத்திரமாக ஒரு கட்டையின் மீது ஏற்றிவிட்டு தண்ணீருக்குள் ஜாக் உயிர்ப் போராட்டம் நடத்துவான். அப்போது வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து ஒற்றைக்குரலில் பாடுவாள் ரோஸ். அந்த இசை  நம் உயிரை உரசும். டைட்டானிக் கப்பலின் பிரமாண்டத்தைக் காட்டும் ஆரம்ப காட்சியிலும், அது உடைந்துவிழும் நேரத்திலும் படத்துடன் ரசிகர்களை ஒன்றவைத்ததில் titanic_the_final_moment-wideஇசைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்தின் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமான இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னெர், விமான விபத்தில் சிக்கி ஒரே நொடியில் காற்றில் கலந்து மறைந்தே போய்விட்டார்.

1953-ம் ஆண்டு லாஸ் ஏஞ்செல்ஸில் ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தாலும், இசை துறையில் நுழைந்த முதல் நபர் ஜேம்ஸ்தான். ஐந்து வயதில் பியானோவை தொட்டவர் கல்லூரி, சினிமா இன்ஸ்டிடியூட் வரையிலும் இசையை விடவே இல்லை. 1979-ம் ஆண்டு ’தி லேடி இன் ரெட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் அடுத்தடுத்த படங்கள் ஹார்னெர் இசையை உலகறிய வைத்தன. 1980-ம் ஆண்டு முதல் ஹாலிவுட்டில் ஹார்னெர் ராஜ்ஜியம்தான்.  48 ஹவர்ஸ், ஸ்டார் டிரெக், கமாண்டோ, குகூன், ஏலியன்ஸ் என வரிசையாக வெற்றிப்படங்கள் அமைந்தன. இதில் ஏலியன்ஸ் படத்திற்கான இசைக்கோர்வை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கன் டெயில் படத்துக்கு ஒரிஜினல் பாடல் என்ற வகையில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 1995-ம் ஆண்டு வெளியான பிரேவ் ஹார்ட், அப்பல்லோ 13 படங்களும் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டன.

விருதுகளின்  கண்ணாமூச்சு ஆட்டம் ஒருவழியாக டைட்டானிக் படத்தின் இசையின் மூலம் முடிவுக்கு வந்தது. மேலும் டைட்டானிக் படத்தின் இசை ஆல்பமான, ‘மை ஹார்ட் வில் கோ ஆன்’ உலகெங்கும் 27 மில்லியனுக்கு மேல் விற்பனையாகி சரித்திர சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து உலகறிந்த இசைப்புயலாக மாறிவிட்டார் ஹார்னர். இவரது புகழுக்கு மேலும் ஒரு மகுடமாக அவதார் படம் அமைந்துவிட்டது. அவதார் படத்துக்கு சிறப்பான இசையை வழங்கவேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப் படத்துக்கும் இசையமைக்காமல் முழு கவனமும் செலுத்தினார்.

நம்ம ஊர் இளையராஜாவைப் போன்ற மென்மையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானைப் போன்ற அதிரடியும் சேர்ந்து செய்த கலவை என்று ஜேம்ஸ் ஹார்னரை சொல்லலாம். ஏராளமான படங்களை ஒப்புக்கொள்வதற்கு தயக்கம் காட்டுபவர். இந்த வருடம்,  தி 33, சவுத்பா எனப்படும்  இரண்டு படங்களுக்கு மட்டுமே  இசையமைக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

james-horner-composer-plane-crash-1இசையைப் போலவே காற்றில் ஜிவ்வென்று விரைந்து பறப்பது ஹார்னருக்கு ரொம்பவே பிடிக்கும். அதனால் விமானியாகப் பயிற்சி எடுத்தது மட்டுமின்றி தனக்கென்று ஒரு குட்டி டர்போ விமானமும் சொந்தமாக வைத்திருந்தார். அந்த விமானத்தில் பயணம் செய்த 22-ம் தேதிதான் விபத்துக்குள்ளாகி மரணத்தைத் தழுவியிருக்கிறார். இந்த உலகத்தை தன்னுடைய இசையால்  மயக்கிய ஹார்னரின் இசைக்கு என்றும் மரணம் இல்லை.

(Visited 135 times, 19 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>