இவள்தான் கலைஞி

Black Swan poster

பாக்காம விட்றாதீங்க – பிளாக் ஸ்வான்:

ஒரு கலையின் உச்சச்தைத் தொடுவதற்கு எத்தனை சிரமப்பட வேண்டும் என்பதை இத்தனை வலியுடன் சொன்ன திரைப்படம் எதுவுமே இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம். அதேபோல் உச்சத்தை  அடைவதற்கு ஒவ்வொருவரும் போராடுவது இயற்கை என்றாலும், அந்த இடத்தில் இருப்பவர் அதனை தக்கவைப்பதற்கான போராட்டமும் கொடுமையானதுதான். எந்த ஒன்றின் மீதும் அளவுக்கு மீறி ஆசை வைக்கக்கூடாது என்பதை எதிர்மறையாக சொல்லித்தரும் பிளாக் ஸ்வானைப் பார்க்கலாம்.

Black Swan10நினா சாயர்ஸ் கதாபாத்திரத்தில் வரும் நாடலி போர்ட்மென் திறமையான பாலே நடன மங்கையாக இருக்கிறாள். அவளது அம்மாவும் முன்னாள் பாலே நடனக் கலைஞர்  என்பதால், மகள் உயர்ந்த இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அவள் உயர்வுக்காக ஒவ்வொரு நொடியும் உழைக்கிறாள். அப்போது, ‘ஸ்வான் லேக்’  என்றொரு புதிய பிரமாண்டமான டான்ஸ் ஷோ நடத்துவதற்கு திட்டமிடுகிறான்  தாமஸ். அந்த ஷோவில் இன்றைய முன்னணி பாலே நட்சத்திரமாக இருக்கும்  பெத் மெக்கன்டருக்குப் பதிலாக புதியவளைத் தேர்வு செய்ய முடிவெடுக்கிறான். தாமஸ் ஸ்டூடியோவைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணும் அந்த இடத்தைப் பிடிப்பதற்காக கடுமையாக  பயிற்சி எடுக்கிறார்கள்.

Black Swan4அந்த நாடகத்தின் கதையைச் சொல்கிறான் தாமஸ். நாட்டின் இளவசரனுக்கு ஒயிட் ஸ்வான் மீது காதல் வருகிறது. அவளும் இளவரசன் காதலை ஏற்கிறாள். இவர்கள் உறவு இனிமையாக போகிறது. இந்த நேரத்தில் ஒயிட் ஸ்வானின் சகோதரி பிளாக் ஸ்வான் வருகிறாள். தனது சகோதரியிடம் இருந்து இளவரசனைப் பிரித்து, தன்னுடைய காதல் வலையில் விழவைக்கிறாள். இளவசரனும் கண்மூடித்தனமாக பிளாக் ஸ்வான் மீது காதல் கொள்கிறான். தன்னுடைய காதலனை மீட்கும் முயற்சியில் தோல்வியடைந்த ஒயிட் ஸ்வான், இனியும் வாழ்வதில் அர்த்தம் இல்லை என்று தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த நாடகத்தில் ஒயிட் ஸ்வான் மற்றும் பிளாக் ஸ்வான் வேடங்களை ஒரே பெண் செய்யவேண்டும்.

Black Swan7தேர்வு நடக்கும்போது அத்தனை பேரையும் மீறி அழகாக நடனமாடுகிறாள் நினா. ஒயிட் ஸ்வான் வேடத்துக்கு அவளைவிட்டால், யாருமே இல்லை எனும் அளவுக்கு தனித்தன்மையுடன் மிளிர்கிறாள். ஆனால் நினாவால் பிளாக் ஸ்வான் வேடத்தில் ஜொலிக்க முடியாமல் போகிறது. ஏனென்றால் நினா அடிப்படையில் மிகவும் சாதுவான, நியாயமான பெண். 28 வயதானபோதும் பாலே நடனத்தில் சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்தினால் காதல், செக்ஸ் போன்ற விவகாரத்தில் ஈடுபடாதவள். இன்னும் சொல்லப்போனால் யாருடனும் கோபப்படவும் சண்டை போடவும் தெரியாதவளாக இருக்கிறாள்.

இப்படியொரு குணத்துடன் இருக்கும் உன்னால் நிச்சயம் பிளாக் ஸ்வான் வேடத்தில் ஜொலிக்க முடியாது. ஒயிட் ஸ்வானை மிஞ்சும் வகையில் ஆர்ப்பாட்டமாகவும், வித்தியாசமாகவும் டான்ஸ் ஆடவேண்டும் என்கிறான் தாமஸ். நிச்சயம் நான் இதனை செய்வேன் என்று அடம் பிடிக்கிறாள் நினா. Black Swan6அப்படியென்றால் முதலில் உன் உடலில் எங்கெல்லாம் இன்பம் இருக்கிறது என்பதை அறிந்துகொள் என்று முத்தம் கொடுக்க முயல, கடித்து வைக்கிறாள். ஆனாலும் நினாவின் ஆர்வத்துக்காகவும் திறமைக்காகவும் அவளை அடுத்த ஸ்டாராக அறிவிக்கிறான் தாமஸ். இந்தத் தகவலை அம்மாவிடம் உணர்ச்சிக்கொந்தளிப்புடன்  நினா பகிர்ந்துகொள்ளும் காட்சி ஒன்றே போதும், இவர் எப்பேர்ப்பட்ட திறமையான  நடிகை என்பதை நிரூபணம் செய்வதற்கு. சில நொடிகளில் ஆயிரம் பாவனைகளைக் காட்டி அசத்திவிடுகிறார்.

IMG_4137.CR2

அந்த விழாவுக்கு வரும் முன்னாள் நம்பர் ஒன் பெத் ஆவேசமாகிறாள். வேண்டுமென்றே ஒரு விபத்தில் சிக்கி கால்களை உடைத்துக்கொள்கிறாள். இது நினாவை அதிர வைக்கிறது. ஆனாலும் பிளாக் ஸ்வானாக மாறுவதற்காக கடுமையிலும் கடுமையாக உழைக்கிறாள். ஒல்லிப்பிச்சானாக இருந்தால்தான் கால் பெருவிரலை உயர்த்தி ஆடமுடியும் என்பதற்காக சாப்பாட்டைத் துறக்கிறாள். அதனால் சத்துக்குறைபாடு ஏற்பட்டு உடலில் சிக்கல் உண்டாகிறது. அவற்றை எல்லாம் தாயிடம் இருந்தும் மறைக்கத் தொடங்குகிறாள்.

Black Swan1எத்தனை முறை ஆடினாலும் பிளாக் ஸ்வான் வேடத்திற்கான தகுதியைப் பெறமுடியாமல் தவிக்கிறாள் நினா. இந்த நேரத்தில் அவளது தோழி லிலி, மிகவும் அனாசயமாக பிளாக் ஸ்வான் நடனம் ஆடுவதைப் பார்க்கிறாள் நினா. உண்மையில் லிலியின் குணமே அப்படிப்பட்டது என்பதை அறிகிறாள். எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் சுதந்திர வாழ்க்கை வாழும் லிலி, விரும்பிய நபர்களுடன் எல்லாம் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதும், பிடித்ததை எல்லாம் செய்யும் மனநிலையில் வாழ்பவள். லிலி தனக்குப் போட்டியாக வந்துவிடுவாள் என்று பயப்படுகிறாள் நினா. முதன்முறையாக அவள் மனதில் துவேசம் வருகிறது.

நாளை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. ஆனாலும் தாமஸ் எதிர்பார்க்கும் அளவுக்கு நினாவால் திறமையைக் காட்டமுடியாமல் போகிறது. மனதளவில் மிகவும் பாதிக்கப்படுகிறாள். ஆனாலும் எப்படியும் பிளாக் ஸ்வான் வேடத்தை சிறப்பாக செய்ய விரும்புகிறாள். அதனால் லிலியுடன் சேர்ந்து கெட்ட விஷயங்களை அறிந்துகொள்வதற்கு ஆசைப்படுகிறாள். அம்மாவின் எதிர்ப்பை மீறி அவளுடன் ஹோட்டலுக்குச் சென்று, மது அருந்தி, லிலி சொன்னபடி நடந்து வீட்டுக்குப் போகிறாள்.

Black Swan9நிகழ்ச்சியன்று மிகவும் தாமதமாக விழித்து எழுகிறாள் நினா. உடல் அனலாக கொதிக்கிறது. அம்மா வேதனையுடன் அவளை பார்க்கிறாள். உன்னால் இன்று நடனம் ஆடமுடியாது என்பதை தாமஸிடம் தெரிவித்துவிட்டேன். ஓய்வெடுத்துக்கொள் என்கிறாள். நீ யார் இதை சொல்வதற்கு?  என்று ஆத்திரமாகிறாள். உடல்நிலை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எழுந்து கிளம்புகிறாள். தடுக்கும் அம்மாவின் கையை உடைத்துவிட்டு ஸ்டூடியோவுக்குப் போகிறாள். அங்கே லிலி இவளது வேடத்துக்குத் தயாராவதைப் பார்த்தும், தானும் முகத்தில் பவுடர் பூசி தயாராகிறாள். தடுக்க முயலும் தாமஸை முதன்முறையாக எதிர்த்துப்பேசி கோபத்தைக் காட்டவே, நினாவே ஆடுவதற்கு சம்மதிக்கிறான்.

Black Swan5வழக்கம்போல் ஒயிட் ஸ்வான் ஆட்டம் பிரமாதமாக அமைகிறது. அடுத்து பிளாக் ஸ்வான் வேடத்துக்காக மேக்கப் போடுவதற்கு வருகிறாள். அப்போது லிலி உள்ளே வருகிறாள். இது உன்னால் செய்யமுடியாது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். உடனே கோபத்துடன் அவளை கண்ணாடியின் மீது தள்ளிவிட்டு, உடைந்த கண்ணாடியை எடுத்து அவளைக் குத்துகிறாள். செத்துவிழுந்த லிலியை அறைக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு மேடைக்குப் போகிறாள். அதுவரை யாராலும் ஆடமுடியாத அளவுக்கு அசுர ஆட்டம் போட்டு, பிளாக் ஸ்வான் ஆட்டத்தில் தன்னை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை என்று காட்டுகிறாள்.

Black Swan12மீண்டும் ஒயிட் ஸ்வானாக மாறுவதற்கு மேக்கப் மாற்றுவதற்காக அறைக்கு வருகிறாள். அப்போது அவளுக்கு வாழ்த்து சொல்ல வருகிறாள் லிலி. இத்தனை பிரமாதமாக நிச்சயம் என்னால் ஆடவே முடியாது என்று மனம் திறந்து பாராட்டிவிட்டுப் போகிறாள். அப்படியென்றால் கொல்லப்பட்டது யார் என்று கதவைத் திறந்து பார்க்கிறாள் நினா. அதன்பிறகு நடப்பவை எல்லாமே கற்பனையிலும் நினைத்துப் பார்க்கமுடியாத விஷயங்கள். அவற்றை நீங்களே பார்த்து ரசியுங்கள்.

அடேங்கப்பா… உச்ச இடத்தை அடைவதும் அந்த இடத்தை தக்கவைப்பதும் எத்தனையெத்தனை போராட்டம். ரஜினிகாந்த்தின் ஒவ்வொரு படத்துக்குமான இடைவெளியும் இந்தப் போராட்டம்தான். உச்சத்தில் இருப்பவர்களைப் பார்த்து இனி பிரமிக்கவேண்டாம், பரிதாப்படுவோம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

சைக்கோ திரில்லர் வகையைச் சேர்ந்த பிளாக் ஸ்வான் திரைப்படம் 2010-ம் ஆண்டு வெளியானது. இயக்குனர் டாரன் அரோனோஃஸ்கைக்கும், நினாவாக உயிரைக்கொடுத்து நடித்த நாடலி போர்ட்மென்னுக்கும் ஏராளமான விருதுகளை அள்ளிக்கொடுத்த திரைப்படம். அத்துடன் பாலே நடனம் குறித்து உலகெங்கும் புதிய விழிப்பையும் ஏற்படுத்தியது.

(Visited 199 times, 17 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>