கருணாநிதி, ஸ்டாலினுக்காக ரியல் ஸ்டீல்

Real Steel 3

பாக்காம விட்றாதீங்க – ரியல் ஸ்டீல்:

தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கும் அப்பாவுக்காக, அவரது  மகன் எத்தனை தூரம் ரிஸ்க்(?) எடுத்து ரஸ்க் சாப்பிடுவான்? அதாவது   நம்ம கருணாநிதி எத்தனையெத்தனையோ சூட்சுமங்களை எல்லாம் அரசியலில் செயல்படுத்திப் பார்த்தாலும் ஜெயலலிதா முன்பு தோற்றுத்தான்  போகிறார். அப்படி தொடர்ந்து அடிமேல் அடி வாங்கினாலும்  ஆட்டத்தில் இருந்து வெளியேறுவது சரியல்ல என்று ஸ்டாலின் சொல்லிக்கொடுத்து ஜெயிக்க வைப்பதுபோன்ற ஒரு பாசமலர் டைப் கதைதான் ரியல் ஸ்டீல்.

Real_Steel_Wallpaperமனிதர்களும் மனிதர்களும் மோதிக்கொள்வதை மக்கள் ரசிப்பது குறைந்துவிட்ட எதிர்காலத்தில் கதை நடக்கிறது. அதீத சக்தி படைத்த இயந்திரன்கள் மோதுவதைத்தான்  மக்கள் ரசிக்கிறார்கள். அதனால் குத்துச்சண்டை வீரனான  ஹூயு ஜேக்மேன் (எக்ஸ்மேன் படத்தில் கைகளில் இருந்து கத்திகளை விரிப்பாரே அவரேதான்) வாழ்வின் விரக்தியில் இருக்கிறான். தொடர் தோல்வி காரணமாக பணம், மனைவியை இழந்துவிட்டவன்,  தன் சொந்த மகனையும் உறவினருக்கு தத்துக்கொடுக்க நினைக்கிறான்.  அதனால்  தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறான் சிறுவன் மேக்ஸ். ஆனாலும் சில காலம் அப்பா ஜேக்மேனுடன் தங்கவேண்டிய சூழல் அமைகிறது.

அப்போது ஆடம் என்றொரு செயல் இழந்த ரோபோட்டைக் கண்டெடுத்து அதற்கு உயிர் கொடுக்கும் செயலில் ஈடுபடுகிறான் மேக்ஸ். உண்மையில் அது சண்டை போடும் இயந்திரன்  கிடையாது. சண்டை பயிற்சியில் ஈடுபடும் ரோபோட்டுகள் அடித்துப் பழகுவதற்காக உருவாக்கப்பட்ட வேலைக்கார இயந்திரன். அந்த ரோபோட்டுக்கு தன்னுடைய குரல் மற்றும் அசைவுகளை வைத்து செயல்பட கற்றுக்கொடுக்கிறான் மேக்ஸ்.

real steel kid hose botஅப்போது ஊருக்குள் சாதாரண ரோபோட் போட்டி  நடக்கின்றன. அதில் மாபெரும் சக்தி படைத்த இயந்திரன்கள் மோதிக்கொள்கின்றன. ஒரே அடியில் மற்ற ரோபோட்களை அடித்து நொறுக்கும் அதீத சக்தி படைத்த இயந்திரன்கள் எல்லாம் போட்டியில் நிற்கின்றன. அந்த போட்டியில்  ஆடம் இயந்திரனை  சண்டையில் ஈடுபடுத்த நினைக்கிறான் மேக்ஸ். இது கதைக்கு ஆகாது என்று மறுக்கிறார் கருணாநிதி, ஸாரி… ஜேக்மேன். ஆனாலும் விடாப்பிடியாக ஆடம் ரோபோட்டை களத்தில் இறக்கி ஜெயித்துவிடுகிறான் மேக்ஸ்.

அதனால் அடுத்தகட்டப் போட்டிக்குச் செல்கிறார்கள். ஆடம் ரோபோட்டை பெரும் விலைகொடுத்து வாங்குவதற்கு வில்லன் குரூப் தயாராக இருக்கிறது. உடனே நல்லவிலைக்கு விற்றுவிட்டு செட்டில் ஆக ஆசைப்படுகிறான் ஜேக்மேன். இங்கேயும் தடுக்கிறான் மேக்ஸ். நமது ரோபோட் திறன் அறிந்துதான் விலை  பேசுகிறார்கள். அதனால் தோற்றாலும் பரவாயில்லை, கண்டிப்பாக போட்டியில் கலந்துகொள்வோம், விற்கவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

Real Steel fightவேறு வழியில்லாமல் அறைகுறை மனதுடன் சம்மதிக்கிறான் ஜேக்மேன். ஆடம் ரோபோட்டுக்கு தன்னுடைய  குத்துச்சண்டை முறைகளை கற்றுக்கொடுக்கிறான். ஜேக்மேன் எப்படி செயல்படுகிறானோ, அதேபோன்று ஆடமும் செயல்படத்தொடங்குகிறது. இறுதிப் போட்டி ஆரம்பமாகிறது. அசகாய சக்தி படைத்த இயந்திரனுட்ன் இறுதிப்போட்டியில் களம் இறங்குகிறது. அடிஅடியென ஆடம் இயந்திரத்தை அடித்து நொறுக்கிறது வில்லன் இயந்திரன். ஆனாலும் திருப்பித்தாக்காமல் அமைதி காக்கிறது ஆடம்.  அதன்பிறகு நடப்பதுதான் எதிர்பாராத திருப்பம். அதனை திரையில் பார்ப்பதுதான்  ஆனந்த அனுபவம் என்பதால் தவறாமல் பாருங்கள்.

"REAL STEEL" Ph: Melissa Moseley ©DreamWorks II Distribution Co., LLC.  All Rights Reserved.

அதிரடி சண்டைப்படம் போன்று தெரிந்தாலும் தந்தை – மகன் பாசப்பிணைப்பு மிகச்சரியாக கையாளப்பட்டிருக்கும். அம்மாக்களைப் போன்று அப்பாக்களால் கட்டிப்பிடித்து, அழுது, சோறு ஊட்டி அன்பைக் காட்டமுடியாது என்றாலும் தாய்ப்பாசத்துக்கு எந்த வகையிலும் தந்தைப் பாசம் குறைந்தது இல்லை என்பதுதான் இந்தப் படத்தின் அடித்தளக் கருத்து. அதேபோல் தன்னை நேசிக்கும் ஒரு பெண்ணிடம், ‘’நான் தொடர்ந்து 26 முறை தோற்றுவிட்டேன்” என்று ஜேக்மேன் வருத்தப்படுவான். அப்போது அவள், ‘அதற்கு முன் எத்தனை முறை வெற்றிபெற்றாய் என்பதை மறந்துவிட்டாயே’ என்று தேற்றுவாளே அது கவிதை.

இதுதவிர, இளையவர்களுக்குத்தான் எதிர்காலத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி அதிகம் இருக்கும். அவர்கள் வழியில் போனால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதையும் சொல்லும் படம் என்பதால் கருணாநிதி – ஸ்டாலினுக்கு இந்தப் படம் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

1956-ம் ஆண்டு வெளியான ’ஸ்டீல்’ என்ற ஆங்கில சிறுகதையைத் தழுவி ‘ரியல் ஸ்டீல்’ திரைக்கதையை  2003-ம் ஆண்டு டேன் கிலோரி என்பவர் உருவாக்கினார். ஆனால் படமாக்குவது தள்ளிபோய்க்கொண்டே இருந்தது. 2009-ம் ஆண்டு புகழ்பெற்ற ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார், ஷான் லெவி இயக்குனராகவும், ஜேக்மேனை நாயகனாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதன்பிறகு திரைக்கதையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு 2011-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து படத்தில் வரும் ரோபோட்களைபோலவே குழந்தைகள் விளையாடுவதற்க்கு பொம்மைகள் வெளிவந்தன. ரோபோட்கள் சண்டை போடுவதை போல வீடியோ கேம்களும், மொபைல் கேம்களும் வெளிவந்தன.

கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்

(Visited 92 times, 9 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>