சிம்புவுக்கு சிபாரிசு – எ வாக் டு ரிமெம்பர்

silambarasan-nayantara-A-walk-to-remember

பார்க்காம விட்றாதீங்க – எ வாக் டு ரிமெம்பர் : 

காதல் வேதனை தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக நடிகர் சிம்பு சமீபத்தில் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தார். துன்பத்தில் துணை நிற்பதற்கு காதலி இல்லையே என்று ஏகமாக வருத்தப்பட்டிருந்தார்.  அவர் இந்த சூழலில் இருந்து வெளிவருவதற்கும், புதிய அல்லது பழைய காதலியை பிடிப்பதற்கும் அதிக சிரமப்பட அவசியம் இல்லை. ஆம்,  ’எ வாக் டு ரிமெம்பர்’ ஆங்கிலப்படத்தை அப்படியே சுட்டு படமாக்கி நடித்தால் போதும். (அந்தப் படம் வெளிவருமா என்ற சந்தேகமே வேண்டாம்…)

A-Walk-To-Remember2இனி ரிமெம்பருக்குள் நுழைவோம். பள்ளியிலேயே மிகவும் கெத்துப்பையன் என்றால் லேண்டன். அவனுடன் சேர்ந்து சுற்றுவதற்காக பெண்கள் மட்டுமின்றி பையன்களும் துடிக்கிறார்கள். கொண்டாட்டமும் கும்மாளமுமாய் திரியும் கும்பலின் அட்டகாசத்தில் ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது. இதற்குத் தண்டனையாக மாணவர்களுக்கு டியூஷன் சொல்லித்தரவும், இசை நாடகத்தில் நடிக்கவும் லேண்டன் அனுப்பப்படுகிறான். அலுப்பூட்டும் இந்த விஷயங்களைச் செய்வதற்காக வகுப்பில் படிக்கும் ஜெமியின் உதவியை நாடுகிறான் லேண்டன்.

அழுக்குப்பெண், முட்டாள், அழகில்லாதவள், பழகத்தெரியாதவள் என்று நண்பர்களால் ஒதுக்கப்படும் ஜெமியோ, ‘உனக்கு நான் உதவவேண்டும் என்றால் நீ என்னை காதலிக்க மாட்டேன்’ என்று சத்தியம் செய்துதர வேண்டும்’ என்கிறாள். கொலைவெறிக்கு ஆளாகிறான் நாயகன் லேண்டன். ஏனென்றால் அவனுக்குப்பின்னே சுற்றும் உலக அழகிகளையே அவன் மதிப்பதில்லை. அதனால் ஏகப்பட்ட கடுப்பை மனதில் மறைத்துக்கொண்டு சம்மதம் சொல்கிறான்.

A-Walk-To-Remember3இருவரும் பழகத் தொடங்குகிறார்கள். அவளது ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுப்புது அர்த்தத்தையும் அழகுணர்ச்சியையும் கண்டு வியக்கிறான் லேண்டன். யாருக்கும் தெரியாமல் ஜெமி தனக்குள் அழகையும் திறமையையும் புதைத்துவைத்திருப்பதை அறிகிறான். உச்சகட்டமாக நாடகம் அரங்கேறும்போது அவளது அழகையும் குரலையும் கண்டு மெய்சிலிர்த்து தன்னைமீறி முத்தமிட்டு விடுகிறான். காதலிப்பதை சொன்னதும் கோபமாகிறாள் ஜெமி. நீ நமது ஒப்பந்தத்தை மீறிவிட்டாய் என்று விலகிச்செல்கிறாள்.

ஜெமி விலகிச்செல்லும் ஒவ்வொரு நொடியும் காதலில் நெருங்குகிறான் லேண்டன். ஜெமியின் தந்தையிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் இவர்களது காதலை ஏற்க மறுக்கிறார். ஆனாலும் மனம் தளராமல் முயற்சிக்கிறான். ஜெமியின்  வித்தியாசமான பல ஆசைகளை நிறைவேற்றி ஜெமியை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். அதனால் மனம் நெகிழும் ஜெமி, ‘நான்  இப்போது கடவுள் மீது பெரும் கோபத்தில் இருக்கிறேன். நானும் உன்னை காதலிக்கிறேன். ஆனால் என்னால் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கமுடியாது. புற்றுநோய் முற்றிவிட்டது’ என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறாள். அதிர்ச்சி அடைந்தாலும் ஜெனியைக் காப்பாற்ற பெருமுயற்சிகள் செய்கிறான் லேண்டன். வசதியான தன் தந்தையின் உதவியை நாடுகிறான். எதுவும் வேண்டாம் என்று ஏற்க மறுக்கிறாள் ஜெனி. மரணம் நிச்சயம் என்றாலும்  திருமணம் செய்துகொள்கிறார்கள்.

A-Walk-To-Remember1மேற்படிப்பு முடிந்து ஒரு மருத்துவராக  ஜெனி இல்லாத வீட்டுக்குத் திரும்ப வருகிறான் லேண்டன்.  ‘உன்னுடைய நிறைய ஆசைகளை நிறைவேற்றினேன். ஆனால் வாழ்நாளில் ஏதேனும் ஓர் அதிசயத்தை நிகழ்த்த ஆசைப்பட்டாய். அதுதான் நடக்கவில்லை’ என்று வருத்தப்படுகிறான்.

அதைக் கேட்கும் ஜெனியின் அப்பா, ’அதுவும் நடந்துவிட்டது. நீதான் அந்த அதிசயம். லட்சியமற்ற இளைஞனாக இருந்த உன்னை உன்னத மனிதனாக மாற்றியிருக்கிறாள்’ என்கிறார். அதனை உணரும் லேண்டன் ஜெனியின் புகைப்படத்தைப் பார்க்க, கண்ணீர் திரையிட்டு படம் முடிகிறது.

காதல் தோல்வியினால் பிரிந்திருக்கும்  சிம்பு – நயன்தாரா, பிரபுதேவா – நயன்தாரா போன்ற ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து(?) இந்தப் படத்தைப் பார்த்தால் மீண்டும் சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அதேநேரம் இப்போது காதலில் இருக்கும் ஜோடி இந்தப் படத்தைப் பார்த்து, ‘உன்னிடம் இப்படிப்பட்ட காதல் கிடைக்கவில்லை’ என்று பிரியவும் செய்யலாம், ஜாக்கிரதை.

பின்குறிப்பு : நிக்கோலஸ் பார்க்கஸ் எழுதிய கதையைத் தழுவி இந்தப்படம் எடுக்கப்பட்டது. நிக்கோலஸின் சகோதரி உண்மையிலே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது நிஜ வாழ்க்கையைத்தான் நாவலில் எழுதியிருந்தார்.  சினிமா திரைக்கதைக்காக நிறைய காட்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.  நாயகன் ஸென் வெஸ்ட், நாயகி மேண்டி மோர் ஆகியோருக்கு இந்தப் படம் ஏராளமான விருதுகளை அள்ளிக்கொடுத்தது. இந்தப் படத்தை இயக்கிய ஆடம் சாங்மென் நடிகராகவும் டான்ஸராகவும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

 

(Visited 103 times, 18 visits today)

Related posts

One thought on “சிம்புவுக்கு சிபாரிசு – எ வாக் டு ரிமெம்பர்

  1. Vinoth

    அருமை ….. ஆனால் சிம்புவுக்கு சிபாரிசு-ணு டைட்டில் வைச்சிட்டு … சிம்பு – நயன்தாரா, பிரபுதேவா – நயன்தாரா போன்ற ஜோடிகள் ஒன்றாக சேர்ந்து(?) இந்தப் படத்தைப் பார்த்தால் மீண்டும் சேர்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு-ணு எழுதியிருக்கறது கொஞ்சம் ஓவர்….. எப்படியும் நயன்தாரா நடுவுல நிண்ணு நன்றி சொல்ல போறதுல்ல….

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>