எனக்குள் 23 பேர் – ஸ்பில்ட் விமர்சனம் – 59 மார்க்

ஸ்பிலிட்

கடவுள் பாதி, மிருகம் பாதி என்று கமல்ஹாசன் குழப்பியதை, தெளிவான திரைக்கதையாக்கி…  ஒரு மனிதனுக்குள் 23 பேரை புகுத்தி ஹிட் அடித்திருக்கிறார் நைட் ஷியாமளன்.

படம் ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்திலேயே பரபரப்பு பற்றிக்கொள்கிறது. அழகான மூன்று இளம் பெண்களை கடத்திப்போய் சிறை வைக்கிறான் ஜேம்ஸ் மெக்வாய். உங்கள் மூவரையும் உணவாக்கப் போகிறேன் என்கிறான் ஜேம்ஸ்.  நாய் அல்லது முதலைக்கு  உணவாக்கப்போகிறான் என்று நினைத்து மூன்று இளம்பெண்களும் நடுங்குகிறார்கள்.

திடீரென பெண்ணாகவும், சிறுவனாகவும் மாறி ஜேம்ஸ் பேசுவதைக் கண்டு மற்றவர்கள் குழப்பம் அடைந்தாலும், அன்யா டெய்லர் மட்டும்,  அவன் ஸ்பில்ட் பெர்சனாலிட்டி பிரச்னையில் சிக்கியிருப்பதை புரிந்துகொள்கிறாள்.  இரண்டு பெண்கள் தப்பிப்பதாக நினைத்து எசகுபிசகாக ஜேம்ஸிடம் மாட்டிக்கொண்டு தனியறையில் அடைக்கப்படுகிறார்கள்.

டென்னிஸாக பெண்களை கடத்திவந்த ஜேம்ஸ், பேரியாக இருக்கும்போது மனநல மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறான். இவனுக்குள் ஏராளமான நபர்கள் ஒளிந்திருப்பதை டாக்டர் ஃபிளிட்சர் கண்டுபிடிக்கிறாள். ஏற்கெனவே உடலுக்குள் 23 நபர்கள் இருக்கும்போது, 24வது நபராக – பீஸ்ட் எனப்படும் கொடூரமான மனித மிருகம் நுழைய இருப்பதாக சொல்லி பயப்படுகிறான்.

பீஸ்ட் என்பது கதைகளில் மட்டும்தான் சாத்தியம், நிஜத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று அவனுக்கு  டாக்டர் ஃபிளிட்சர்  எடுத்துச்சொல்லி ஆறுதல் படுத்துகிறாள். ஆனாலும் பீஸ்ட் வரப்போவதை உறுதியாக நம்புகிறான்.   இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஒரு நாள் பாரியிடம் இருந்து அவசரம் என்று ஏராளமான மெயில்கள் வருகின்றன. உடனே அவனை காப்பாற்ற டாக்டர் ஃபிளிட்சர் அவனுடைய இடத்துக்குப் போகிறாள். அங்கு பேரிக்குப் பதிலாக டென்னிஸ் இருக்கிறான். அவனிடம் பேசி நிலைமையை புரியவைக்க முயல்கிறாள் டாக்டர்.

ஆனால் , பீஸ்ட் வந்து ஆளுமை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது என்று சொல்கிறான். அவன் மீது சந்தேகப்பட்டு வீட்டை சுற்றிப் பார்க்கும்போது, அடைபட்ட பெண்களை பார்க்கிறாள். அதனால் டாக்டருக்கும் மயக்கம் கொடுத்து கைதியாக்குகிறான்.

அதன்பிறகு நடப்பதுதான் உச்சபட்ட திகில். சாதாரண மனிதனாக இருக்கும் கெவின்… தானே பீஸ்ட் ஆக மாறுகிறான். டாக்டருடன் சேர்த்து நால்வரையும் அடைத்திருக்கும் இடத்துக்கு  கொடூரமான மிருகமாக  வருகிறான்.  உணவுக்காகத்தான் பெண்களை அடைத்து வைத்திருக்கிறான். அதன்பிறகு கொன்றானா… தின்றானா என்பதை திரையில் பார்த்து நடுங்குங்கள்.

அடைபட்டிருக்கும் மூன்று பெண்களில் ஒருவரான அன்யா டெய்லர் ஆரம்பத்தில் இருந்தே யாருடனும் ஒட்டாத பெண்ணாக இருக்கிறார். அவள்தான் கடத்தப்பட்டவனுக்குள் ஒரு சிறுவனும் இருப்பதை கண்டுபிடிக்கிறாள். இருவரும் ஒரே மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் என்பதை சொல்லும் பிளாஸ்பேக் பளீரென முகத்தில் அறைகிறது. தன்னுடைய ரசிகர்களை நைட் சியாமளன் ஏமாற்றவில்லை என்பதால் வித்தியாசமான படம் பார்க்க விரும்புபவர்கள் நம்பிக்கையோடு போகலாம்.

நமது மதிப்பெண் : 59 மார்க்

திகில் பட ரசிகர்களுக்கு : 63 மார்க்

பின்குறிப்பு :

* எக்ஸ் மேன் படத்தில் சின்ன வயது பேராசிரியராக வரும் ஜேம்ஸ் மெக்வாய், இந்தப் படத்தில் நடிப்பு ராட்சஸனாக உருமாறி இருக்கிறார். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் தன்னுடைய உடல் மொழியால்  மிரட்டுகிறார்.

* இது நைட் சியாமளனின் 15வது படம். இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதை படம் பார்த்து கண்டுபிடியுங்கள்.

* புத்திசாலித்தனமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் புரூஸ் வில்லிஸை நடிக்கவைத்து, தன்னுடைய அடுத்த படமான கிளாஸ்க்கு அழுத்தமான முன்னோட்டம் கொடுத்துவிட்டார்.

(Visited 703 times, 283 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>