ராஜமெளலி எனும் அற்புதன் – பாகுபலி2 – 78 மார்க்

baahubali-2-759

முதல் இனிப்பு தந்த சுவையை இரண்டாம் இனிப்பு தருவதில்லை என்ற கருத்தை பாகுபலி இரண்டாம் பாகத்தில் உடைத்திருக்கிறார் ராஜமெளலி.  கண்களால் காணும் கனவை காட்சியாக மாற்றும் வித்தை ராஜமெளலிக்கு  பிரமாதமாக கைவந்திருக்கிறது.  அதனால் பிரமாண்டத்துக்கும் அப்பால் கனவு கண்டு, அதனை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

பாகுபலி முதல் பாகத்தில் என்ன நடந்தது என்பதை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல்  இரண்டாம் பாகத்தை ஒரு புதிய படமாகவே நினைத்ததில் புத்திசாலித்தனம் தெரிகிறது. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற ஒரு வரி மட்டும்தான்  முதல் பாகத்தின் தொடர்ச்சி. நெஞ்சை தொடும் வகையிலும், நம்பகத்தன்மை கெடாமலும், படத்தின் எந்த ஒரு கேரக்டரின் தன்மை மாறாமலும் விடை அளித்ததால், இந்தப் படம்  வெற்றியைத் தொட்டுவிட்டது.

பாகுபலியாக வரும் பிரபாஸ் வாழ்க்கையில் இனியொரு முறை இத்தனை சிறப்பான பாத்திரம் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். அனுஷ்காவை பார்த்ததும் காதல் கொள்வதும், அவருக்கு அம்பெறியும் கலையை கற்றுத்தருவதும், மாறவர்மனுக்கு வீரம் போதிப்பதும், தாய்ப்பாசத்தில் ராஜமாதாவிம் மயங்கி நிற்பதும்,, சலனமில்லாமல் தளபதியாக பொறுப்பேற்பதும், முதுகில் குத்திய கட்டப்பாவை மன்னிப்பதுமாக  நிஜ அரசனாகவே வாழ்ந்திருக்கிறார் பிரபாஸ்.

பிரபாஸ் கேரக்டரை மிஞ்சும்வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது குந்தள தேசத்து யுவராணி தேவசேனாவாக வரும் அனுஷ்காவின் பாத்திரம். காதலித்தவனுடன் பணிப்பெண்ணாககூட வருவேன், கைதியாக வரமாட்டேன் என்று உறுதி காட்டுவதும், ராஜா மாதாவின் கண் முன்னே இத்தனை அநியாயம் நடக்கிறதா என்று கொந்தளிப்பதும், தொட முயன்றவன் கை விரல்களை வெட்டிப் போடுவதுமாக அனுஷ்காவின் ராஜாங்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

நாயகன், நாயகியைவிட இந்தப் படத்தின் அச்சாணியாகத் திகழ்வது ராஜமாதாவாக வரும் ரம்யாகிருஷ்ணனும் அவரது அடிமை நாயாக வரும் கட்டப்பா சத்யராஜும்தான். ரம்யாகிருஷ்ணன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் கட்டளையாக மிளிர்கிறது, ஒவ்வொரு பார்வையும் அக்னியாக எரிகிறது.  பாகுபலியை கொலை செய்தாலும் மகாபாரத பீஷ்மன் போன்று ஏற்றுக்கொண்ட வேடத்திற்கு பெருமை சேர்க்கிறார் சத்யராஜ்.

ஏதாவது சில காட்சிகளில் கிராபிக்ஸ் சிறப்பாக இருக்கிறது என்றால் குறிப்பிடலாம், ஒட்டுமொத்தப் படமும் அற்புதமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. வில்லன் ரானாவுக்கு போதிய வாய்ப்பு இல்லையென்றாலும் பிரபாஸுடன் சிறப்பாகவே மல்லுக்கட்டுகிறார். அழகி தமன்னாவை கண்டுகொள்ளவே இல்லை.

படத்தின் குறை என்று பார்த்தால் அவ்வப்போது வரும் நீளமான காட்சிகள்தான். சண்டைக்காட்சிகளில் ஜெயிப்பதற்கு பயன்படுத்தப்படும் தந்திரங்களில் பிரமாண்டம் மட்டுமே தெரிகிறதே தவிர புத்திசாலித்தனம் இல்லை. பாடல்கள் நெஞ்சை தொடாமல் தள்ளியே நிற்கிறது. ஆனால் இவற்றை குறைகளாக எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொருவரும் தியேட்டரில் சென்று பார்க்கவேண்டிய திரைப்படம் பாகுபலி 2.

ஹாலிவுட் தரத்தை மிஞ்சியதற்காக நம் ராஜமெளலிக்கு ராயல் சல்யூட்.

(Visited 434 times, 103 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>