இங்கிலீஸ் பராசக்தி – 12 ஆங்ரி மென் (12 Angry Men)

Tamil Hollywood 12 Angry Men poster

பாக்காம விட்றாதீங்க – 12 ஆங்ரி மென்.

தமிழ்நாட்டில் சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்தின் நீதிமன்ற காட்சிகள் நாட்டையே குலுக்கியது என்பார்கள். அப்படி சொல்பவர்களை கட்டிப்போட்டு இந்தப் படத்தை பார்க்க வைக்க வேண்டும்.

சினிமாவை  விஷுவல் மீடியம் என்பார்கள். வசனங்களைவிட காட்சிக்குத்தான் முக்கியத்துவம் வேண்டும் என்று அழுத்திச்சொல்வார்கள். அப்படியெல்லாம் சினிமாவுக்கு எந்த இலக்கணமும் தேவையில்லை, சொல்வதை திருந்தச் சொன்னால் போதும் என்று அழுத்தமாக பதிய வைத்திருக்கும் படமே 12 ஆங்ரி மென். தூக்குத் தண்டனைக்கு எதிராக ஆயிரத்தெட்டு கருத்தரங்குகள் போடுவதைவிட, இந்தப் படத்தை போட்டுக்காட்டினால் போதும்.

சமீபத்தில் 18 வயதை கடந்த ஒருவன், தன் சொந்த அப்பாவை கொன்றுவிட்டதாக வழக்கு நடக்கிறது. அவன் கத்தியால் குத்தியதை எதிர் ஃபிளாட்டில் இருக்கும் ஒரு பெண் பார்த்ததாக சாட்சி சொல்கிறாள். ஆனால் அப்போது ஒரு டிரெயின் கடந்துபோனதாகவும், ஒவ்வொரு பெட்டிக்கு இடைவெளியிலும் அந்த காட்சிகள் தெரிந்ததாக சொல்கிறாள். கொலை செய்துவிட்டு தப்பியோடிய போது, சத்தம் கேட்டு பார்த்ததாக ஒரு தாத்தா சாட்சி சொல்கிறார். கொலை செய்துவிட்டு ஒரு சினிமாவுக்குப் போய்விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது, அவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் கத்தியை வாங்கியதற்கு ஆதாரம் இருக்கிறது.

இந்த சூழலில் அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பதை 12 ஜூரிகளிடம் ஒப்படைக்கிறேன், அவர்கள் சொல்வதுபோல் தண்டனை அமையும் என்று நீதிபதி உத்தரவிடுகிறார். இப்போது இந்த நடைமுறை இல்லை என்றாலும் 12 ஜூரிகள் யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

Tamil Hollywood 12 Angry Men1வழக்கு நடப்பதை முழுமையாக பார்த்த 12 நபர்கள் ஜூரிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக என்ன தீர்ப்பு சொல்கிறார்களோ, அதுவே நீதியின் தீர்ப்பாக இருக்கும். அதனால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து ஜூரிகள் முடிவெடிக்க வேண்டிய நிலை வருகிறது.

12 ஜூரிகளும் தனி அறைக்குள் அடைத்து பூட்டப்படுகிறார்கள். அனைவரும் சேர்ந்து தெளிவான முடிவு எடுக்கும்வரை கதவுகள் திறக்கப்படாது, அதுவரை யாரும் வெளியேறுவதற்கு அனுமதி இல்லை. யாரும் யாருக்கும் அறிமுகமான நபர்கள் இல்லை. ஒவ்வொரு நபரும் வெவ்வேறு வேலைகள் செய்பவர்கள்.

மிகவும் எளிதாக இந்த விஷயம் முடிந்துவிடும் என்று அனைவருமே நினைக்கிறார்கள். குற்றவாளிக்கு மரண தண்டனை தரவேண்டும் என்று சொல்பவர்கள் கை தூக்குங்கள் எனும்போது 11 பேர் கைகளை உயர்த்துகிறார்கள். தண்டனை தரக்கூடாது என்பதற்கு ஒரே ஒருவர் மட்டுமே ஆதரவாக இருக்கிறார்.

அனைவரும் அவரை பார்த்து சிரிக்கிறார்கள். ஒருவர்தானே எளிதாக அவரை சரிக்கட்டி, அவரது ஆதரவையும் பெற்றுவிட்டால் வேலை எளிதாக முடிந்துவிடும் என்று நம்புகிறார்கள். ஏனென்றால் ஒருவன் ஒரு மேட்ச்சுக்கு போவதற்கு டிக்கெட் எடுத்திருக்கிறான், இன்னொருவனுக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கிறது.

அதனால் அவரிடம் நீங்கள் அவன் குற்றவாளி என்று ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர் அவன் குற்றம் செய்தானா இல்லையா என்று தெரியாது. ஆனால் நாம் ஒருவனது உயிர் பற்றி முடிவெடுக்க இருக்கிறோம். அதனால் இந்த கேஸ் பற்றி கொஞ்சநேரம் பேசிவிட்டு, அவனை நாம் குற்றவாளியா இல்லையா என்று தீர்மானிக்கலாம் என்று சாதாரணமாக சொல்கிறான் ஜூரி எண் 8 ஆக இருப்பவன். இது சரியான விஷயம் என்று அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்.

முதல் விஷயத்தை மட்டும் பேசுவோம், அவன் ஒரு கத்தி வாங்கியதை கடைக்காரன் உறுதி படுத்தியிருக்கிறான். அவனும் கத்தி வாங்கியதை ஒப்புக்கொண்டிருக்கிறான். அந்த கத்தியால்தான் கொலை நடந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

ஆனால் அவனிடம் இருந்து கத்தி கைப்பற்றப்படவில்லை, அது உடலில்தான் இருந்தது என்று 8-ம் ஜூரி சொல்கிறார்.

அந்த கத்தியை வாங்கியதாக குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளான் என்று மற்றவர்கள் சொல்ல, அதுபோன்ற கத்தியை வாங்கியதாக சொல்லியிருக்கிறான் என்று திருத்துகிறான். அந்தக் கத்தி வித்தியாசமானது, அதனால் அதுபோல் நிறைய கத்தி இருக்கமுடியாது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். சிலர் அந்த கத்தியை பார்க்க விரும்பியதும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி பார்வைக்கு கொண்டுவரப்படுகிறது. அப்போது அதே போன்ற ஒரு கத்தியை 8ம் நம்பர் எடுத்துக் காட்டுகிறார். என்னால் இந்த கத்தியை சாதாரணமாக வாங்கமுடியும்போது, இதே போன்ற வேறு ஒரு கத்தியை அவனும் வாங்கியிருக்க முடியும் என்கிறான் 8.

இதுபோல் சிறுவனுக்கு எதிராக இருக்கும் ஒவ்வொரு சாட்சியையும் சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறான். அதனால் குற்றவாளி என்று சொன்ன ஒரு நபர் தன்னுடைய நிலையை மாற்றிக்கொள்கிறார். தொடர்ந்து தன்னுடைய வாதத் திறமையால் ஒவ்வொரு சாட்சிகளின் கூற்றுக்களையும் நிதானமாக எடுத்துப் பேசுகிறான்.

Tamil Hollywood 12 Angry Men2ஒரு கட்டத்தில் ஜூரிகளுக்குள் சண்டை, சச்சரவு ஏற்படுகிறது, தொடர்ந்து எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. சந்தேகம் இருந்தாலும் நான் அவனை குற்றவாளி என்றுதான் சொல்வேன், அவன் விடுதலை ஆவதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று ஒரு ஜூரி மட்டும் உறுதியாக சொல்கிறான். ஆரம்பத்தில் குற்றவாளி என்று 11 பேர் சொன்ன நிலை மாறி, இறுதிக்கட்டத்தில் 11 பேர் ஆதரவாக மாறுகிறார்கள். அந்த ஒருவர் தன்னுடைய நிலையை மாற்றிக்கொண்டாரா இல்லையா என்பதை திரையில் கண்டு ரசியுங்கள்.

மரண தண்டனையை மட்டுமின்றி, நீதித்துறையையே இந்தத் திரைப்படம் கேள்வி கேட்கிறது. ஓர் அறையில் அமர்ந்துகொண்டு, ஒருவனுக்கு தண்டனை தருவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்பதுதான் இந்தப் படத்தின் கரு. மனிதாபிமானத்தின் மறுபெயர் 12 ஆங்ரி மென். சினிமா விரும்பிகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் பார்க்கவேண்டிய திரைப்படம்.

கையில் பேனா இருக்கிறது என்பதற்காக தீர்ப்பு எழுதிவிடக்கூடாது என்று பொட்டிலடித்து சொல்கிறது 12 ஆங்ரி மென்.

ஐ.எம்.டி.பி. : 8.9

நமது  மதிப்பெண் : 92

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

  • இந்தப் படத்தின் ஆகப்பெரும் சிறப்பு அனைவருமே ஆண்களாக இருக்கிறார்கள். படம் முழுவதும் இந்த ஆண்கள் மட்டுமே வருகிறார்கள். பெண்கள் இல்லாமல் ஒரு படம் எடுத்து வெற்றி அடைந்திருக்கிறது என்பது வரலாற்று சிறப்பு.
  • ஒரே அறையில் வசனங்களால் மட்டும் சிறந்த திரைப்படம் தரமுடியும் என்று காட்டியிருப்பவர் ரெஜினால்ட் ரோஸ்.
  • தொலைக்காட்சிக்காகவே முதலில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. தொலைக்காட்சியில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து, சினிமாவாக எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்றது.
  • உலகில் உள்ள அத்தனை சினிமா லைப்ரரிகளிலும், சினிமா பள்ளிகளிலும் இந்தப் படம் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் படத்தில் சிறப்பாக யார் நடித்தார்கள் என்று குறிப்பிட வேண்டியதே இல்லை, ஏனென்றால் கத்தியை போன்ற வசனங்களை யார் பேசினாலும் நன்றாகவே ஓடியிருக்கும்.

Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

12 Angry Men is a 1957 American courtroom drama film adapted from a teleplay of the same name by Reginald Rose. Written and co-produced by Rose himself and directed by Sidney Lumet.

(Visited 893 times, 307 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>