காதல் போராட்டம் – லா லா லேண்ட் – 40 மார்க் (La La Land Review)

Tamil Hollywood La La Land review poster

ஜஸ்ட் வாட்ச் – லா லா லேண்ட் (La La Land Movie Review)

லட்சியத்திற்கு குறுக்கே காதல் வந்தால் என்னவாகும் என்பதை இசைமழையாக சொல்லும் படமே லா லா லேண்ட். இந்தப் படத்தின் முக்கியச் சிறப்பு வண்ணமயமான படமாக்கலும் நெஞ்சை தொடும் பாடல், இசை மற்றும் நடனம்.

நடிகையாக ஆசைப்படும் மியா (எம்மா ஸ்டோன்) பங்கேற்கும் அத்தனை ஆடிசன்களிலும் கேவலமாக தோற்றுப்போகிறார். அதேபோல் ஜாஸ் இசைக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையில் பிரத்யேக ஜாஸ் கிளப் ஆரம்பிக்க நினக்கும் செபஸ்டின் (ரேயன் கோஸ்லிங்) கனவு நிறைவேறாமல் இருக்கிறது. அவன் பியானிஸ்ட்டாக பணியாற்றும்   ஹோட்டல்களில், அவ்வப்போது  தன்னுடைய  ஆசைக்காக்  ஜாஸ் இசையை புகுத்த நினைக்கும்போதெல்லாம் வேலையில் இருந்து விரட்டப்படுகிறான். இரண்டு பேருக்கும் தோல்வி, தோல்வி தோல்வி மேல் தோல்வி என்று வாழ்க்கை கழிகிறது.

Tamil Hollywood La La Land review 1இனிமேல் ஒழுங்காக ரெஸ்டாரென்ட்டில் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் இசைக்க வேண்டியதுதான் என்று செபஸ்டின் ஒரு வேலைக்குப் போகிறான். அவர்கள் கொடுக்கும் பட்டியல் படி இசைக்கிறான். ஆனால் தன்னுடைய உள்ளக்கிளர்ச்சியை அடக்கமுடியாமல் ஒரு ஜாஸ் இசையை இசைக்க, உடனடியாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்படுகிறான். அந்த ஜாஸ் இசையை கேட்டு மயங்கியபடி அறிமுகப்படுத்திக்கொள்ள வருகிறாள் மியா. ஆனால் கண்டுகொள்ளாமல் வெளியேறுகிறான்.

இருவரும் சந்திக்கும் சூழல் உண்டாகிறது. திறமைசாலிகளாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருவரும் தடுமாறுவது தெரிகிறது. இருவருக்கும் நெருக்கம் உண்டாகிறது. ஒரு சினிமாவுக்கு அழைக்கிறான் செபஸ்டின். ஒப்புக்கொள்ளும் மியாவுக்கு அப்போதுதான் அன்று அவளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் நடக்க இருப்பது தெரிகிறது. செபஸ்டினுக்கு தகவல் தெரிவிக்க முடியாமல், நிச்சயத்துக்கு ஒப்புக்கொள்ள முடியாமலும் தடுமாறுகிறாள். ஒரு கணத்தில் சட்டென முடிவெடுத்து, அந்த இடத்தைவிட்டு செபஸ்டினை தேடி ஓடுகிறாள். சினிமா ஆரம்பித்தும் மியாவை காணவில்லையே என்று காத்திருக்கும் வேதனையில் இருக்கும் செபஸ்டின், மியாவைப் பார்த்ததும் துடித்துவிடுகிறான். இருவரும் தங்களுக்குள் காதல் இருப்பதை உணர்கிறார்கள். தங்கள் தோல்வியை காதல் மூலம் தீர்த்துக்கொள்கிறார்கள். ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள்.

Tamil Hollywood La La Land review 2இந்த நேரம் வெளிநாட்டுக்கு டூர் செல்லும் ஒரு இசைக்குழுவில் பியானோ இசைக்கும் பணி செபஸ்டினுக்கு கிடைக்கிறது. நல்ல சம்பளம், நிரந்தர வருமானம் கிடைக்கும் என்பது தெரிகிறது. மியாவின் பெற்றோர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்பதால் இசைக்குழுவில் இணைகிறான். அந்த இசைக்குழுவின் முதல் கச்சேரிக்கு வருகிறாள் மியா. செபஸ்டின் பிரமாதமாக வாசித்தாலும் அவனுடைய கனவு இதுவல்ல என்பதை உணர்கிறாள். பிறகு ஏன் இதனை ஏற்றுக்கொண்டாய் என கேட்கிறாள். உனக்காகத்தான், நிரந்தர வருமானம் கிடைக்கும், உன் பெற்றோர்களுக்கு பிடித்தமாதிரி இருக்கும் என்றதும் கோபமாகிறாள். அவனைவிட்டு விலகுகிறாள்.

செபஸ்டின் ஆலோசனைபடி தனிநபர் நாடகம் ஒன்று இயற்றி, தானே நடிக்கிறாள் மியா. ஆனால் மொத்தமே நாலைந்து நபர்களே அந்த நாடகத்துக்கு வருகிறார்கள், அவர்களுடைய விமர்சனமும் மோசமாக அமைகிறது. அந்த நாடகத்தை பார்ப்பதற்கு முடியாமல் புதிய குழுவின் போட்டோ ஷூட்டில் மாட்டிக்கொள்கிறான் செபஸ்டின். பின்னர் ஓடிவந்து பார்க்கிறான், மியா தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். எனக்கும் நடிப்புக்கும் தொடர்பு இல்லை என்று சொல்கிறாள். இருவரும் தனியே பிரிகிறார்கள்.

அப்போது சினிமா இயக்குனர் மியாவின் நம்பரை தேடி செபஸ்டினுக்கு போன் செய்கிறாள். சொந்த ஊருக்கு திரும்பிவிட்ட மியாவை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து அந்த ஆடிஷனில் கலந்துகொள்ள செய்கிறான். நிச்சயம் ஜெயிப்பாய் என்று நம்பிக்கை கொடுக்கிறான். அப்படியே நடக்கிறது.

ஐந்து ஆண்டுகள் கழிகிறது.

இப்போது ஒரு புகழ்பெற்ற நடிகையாக இருக்கிறாள் மியா. தனது புதிய கணவன் மற்றும் குழந்தையுடன் ஒரு புதிய ஊருக்கு வருகிறாள். அங்கே ஒரு ஜாஸ் கிளப் இருக்கிறது என்று கணவன் அழைத்து செல்கிறான். அங்கே போனதும்தான் அது செபஸ்டினுடையது என தெரியவருகிறது. மியாவை பார்க்கும் செபஸ்டின் இருவருக்குமான காதல் பாடலை இசைக்கிறான். இசை நிகழ்ச்சி முடிகிறது.

கணவனுடன் கிளம்பும் மியா… கதவருகே சென்றதும் செபஸ்டினை திரும்பி ஒரு பார்வை பார்க்க…. செபஸ்டின் ஒரு புன்னகை பூக்க… செமத்தியான கவிதை.

இசை, காதல் பிடித்திருந்தாலும் கொஞ்சம் பொறுமையும் இருப்பவர்கள் இந்தப் படத்தை பார்க்கலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

  • இருவரது சந்தோஷம், சோகம், காதல், தோல்வி, சாதனை போன்றவைகளுக்கு ஏற்ப காலத்தை காட்டி படமாக்கியிருப்பது புதுசு.
  • இந்தப் படத்துக்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் டாமியன் சாஷெல்.
  • இந்தப் படம்தான் டாமியனுக்கு மூன்றாவது படம் என்று சொல்லலாம். ஏகப்பட்ட கோல்டன் குளோப் அவார்டுகளை அள்ளியிருக்கும் இந்தப் படம் ஆஸ்காரிலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது.
  • நாயகன் ரேயன் இந்தப் படத்துக்காக பியானோ மற்றும் நடனப்பயிற்சி ஸ்பெஷலாகவே எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

La La Land is a 2016 American romantic musical comedy-drama film written and directed by Damien Chazelle and starring Emma Stone and Ryan Gosling as an aspiring actress and musician who meet and fall in love in Los Angeles. The film’s title refers both to the city of Los Angeles and to the idiom for being out of touch with reality. La La Land Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Just see, Just watch, Tamil Hollywood

(Visited 618 times, 108 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>