பாக்காம விட்றாதீங்க – காந்தி – அஹிம்சையின் தரிசனம் (Gandhi Movie Review)

Tamil Hollywood Gandhi Movie Review poster

ரூபாய் நோட்டுகளில் மட்டுமே மகாத்மா காந்தியை பார்த்திருக்கும் இளைய சமுதாயத்தினருக்கு நிஜமான காந்தியை அறிமுகப்படுத்திய பெருமை ரிச்சர்டு அட்டன்பரோவுக்கு உண்டு. இந்தியர்களை அடக்கியாண்ட வெள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து ஒருவர்தான் தேசத்தந்தை காந்தியை பற்றி திரைப்படம் எடுத்தார் என்பதை வேதனையுடன் அல்லது பெருமையுடன் பதிவு செய்யலாம். ஆயிரம் புத்தகங்கள் கொடுக்காத விழிப்புணர்வை ஒரு திரைப்படம் கொடுத்துவிட முடியும் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் காந்தி. ஒரு பரதேசி போன்று தோற்றமளிக்கும் ஒரு நபரை பற்றி படமெடுப்பதற்கு எப்படி பணம் கொடுக்கமுடியும் என்று பெரிய சினிமா நிறுவனங்கள் எல்லாம் கைவிரித்தபோதும், தன்னுடைய சேகரிப்புகளையும் அரிய கலை பொக்கிஷங்களையும் விற்பனை செய்து சொந்தமாக இந்த படத்தை தயாரித்தார் அட்டன்பரோ. ஆங்கிலேயராக இருந்தாலும் காந்தியை மிகச்சரியாக காட்டியதற்காக அட்டன்பரோவுக்கு ஒவ்வொரு இந்தியனும் கடமைப்பட்டிருக்கிறான்.

தேசத் தந்தை காந்தி பிரார்த்தனை கூடத்திற்கு வேகவேகமாக செல்லும்போது கோட்சேவால் சுட்டுக் கொல்லப்படும் காட்சியில் இருந்து படம் தொடங்குகிறது. பக்கிரி போன்ற எளிய மனிதனின் மறைவுக்கு இந்தியாவே அழுது புலம்புகிறது. இந்து, முஸ்லீம் என்ற மத பாகுபாடு இன்றி அத்தனை பேரும் காந்தியின் மறைவை தாங்கமுடியாமல் தவிக்கிறார்கள். பார்க்கும் ஒவ்வொரு நபரையும் கண் கலங்கவைக்கிறது காந்திஜியின் இறுதி ஊர்வலம்.

Tamil Hollywood Gandhi Movie Review 3காந்தியின் அரசியல் வாழ்க்கை தென்னாப்பிரிக்காவில் தொடங்குகிறது என்பதை அழுத்தம்திருத்தமாக பதிவு செய்திருக்கிறார் அட்டன்பரோ. ஒரு ரயில் சம்பவம் இந்திய விடுதலைக்கு வித்திட்டது என்றும் சொல்லலாம். தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்யும் காந்தியை மூன்றாம் வகுப்புக்கு செல்லுமாறு வெள்ளை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களிடம் எவ்வித அச்சமும் இன்றி துணிச்சலுடன், எனக்கு முதல் வகுப்பில் செல்வதற்கு எல்லா உரிமையும் உள்ளது என்கிறார். அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத்தான் உரிமையும் உண்மையும் பிடிக்காதே. ரயிலில் இருந்து வெளியே தள்ளப்படுகிறார் காந்தி. அன்று பயந்து பின்வாங்கியிருந்தால், காந்தி என்ற மாமனிதனைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கவே மாட்டோம்.

இனவெறியை எதிர்த்து அந்நிய மண்ணில் தன்னுடைய முதல் போராட்டத்தை தொடங்குகிறார் காந்தி. வெள்ளையர்களின் எதேச்சதிகாரம் குறித்து இந்திய மக்களிடம் உரையாற்றுகிறார் காந்தி. அவர்கள் என்னை கொன்றுபோடலாம் ஆனால் என் மன உறுதியை ஒருபோதும் வெல்லமுடியாது எனும்போது, புரட்சியாளனாக தெரிகிறார். அன்று தொடங்கிய அறவழிப் போராட்டம், சட்டப்போராட்டம் இரண்டும் காந்தியின் தனித்துவ அடையாளம். அந்த போராட்டத்தையே இந்தியாவில் தொடர்கிறார் காந்தி.

Tamil Hollywood Gandhi Movie Review 1தலைவர்கள் மட்டும் போராடுவது சுதந்திர போராட்டமாக சரியாக இருக்காது, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினார் காந்தி. அதெல்லாம் எப்படி நடக்கும், மக்களுக்கு என்ன தெரியும் என்று சொன்னார்கள். ஆனால் காந்தி சொன்னதுதான் நடந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை என வீட்டுக்கு ஒருவர் போராட்டத்திற்கு வந்தார்கள். சத்தியாகிரக போராட்டத்திற்காக கடைசி வரை களத்தில் நின்று உறுதியுடன் அடிபட்டார்கள்.

சாமான்யர்களுக்கான சுதந்திரமே முக்கியம் என்று நினைத்தார் காந்திஜி. வீட்டுப் பெண்களும் பங்கேற்கும்வகையில் புதிய போராட்ட உத்தியை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார் காந்திஜி. உலகம் இதுவரை காணாத புதுவகையான போராட்டம். ஆயுதம் இல்லாமல் வெள்ளையர்களை நடுங்கவைக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார் காந்திஜி.

இந்திய சுதந்திர போராட்டத்தில் மாபெரும் கொடூர நிகழ்வு என்றால் அது ஜாலியன் வாலாபாக்கில் நடந்த துப்பாக்கி சூடுதான். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நாடெங்கும் பெரும் வரவேற்பு பெறுவதைக் கண்டு மனம் குமைந்த வெள்ளையர்களின் திட்டமிட்ட வன்முறை செயல்தான்  ஜாலியன் வாலாபாக் படுகொலை. வெள்ளையர்களின் கொலை வெறியைக் கண்டு மக்கள் போராட்டத்தில் இறங்கக்கூடாது என்று திட்டமிட்டே ஜெனரல் டயர் துப்பாக்கி சூடு நடத்தினான். இப்போது பார்த்தாலும் ரத்தம் கொதிக்கும் சம்பவம் இது. கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து யாரும் தப்பித்துச் செல்லமுடியாதவண்ணம் அனைத்து பகுதிகளில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டு அந்த இடத்தையே ரத்தத்தால் குளிப்பாட்டினான் டயர். இந்த படுகொலையில் 1516 பேர் மரணம் அடைய, ஆயிரக்கணக்கானவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்

Tamil Hollywood Gandhi Movie Review 4அதுபோல் நாட்டை உலுக்கிய காந்தியின் உப்பு சத்தியாகிரகமும் அட்டகாசமான பதிவு என்றே சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமாக காந்தியின் பின்னே தொண்டர்கள் அதிகரித்துக்கொண்டே வருவதையும், அதனை தடுக்கும் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடாமல் அடிபட்டு மண்டை உடைந்து விழுவதும் நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.  நிஜமான காந்தியும் சினிமா காந்தியும் இணையும் கட்டங்கள் அற்புதத்தின் எல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

கையில் துப்பாக்கி தூக்காமல் இன்னும் சொல்லப்போனால் ரத்தம் இழக்கக்கூடாது என்று ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்திய காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இதைவிட சுருக்கமாக, இதைவிட தெளிவாக யாரும் சொல்லிவிட முடியாது. படத்தின் மாபெரும் சிறப்பு, பாத்திரத்திற்கு ஏற்ப தேர்வு செய்யப்பட்டிருக்கும் நபர்கள்தான். காந்தியாக வாழ்ந்திருக்கும் பென் கிங்ஸ்லியின் நடிப்பு அவரது கிரீடத்தில் ஒரு வைரம் என்றுதான் சொல்லவேண்டும். அதுபோல் நேரு, கஸ்தூரிபாய் காந்தி என்று ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஆட்களை மிகச்சரியாக தேர்வு செய்திருக்கிறார் அட்டன்பரோ.

அதுபோல் படத்தில் உரையாடல்கள் மிகவும் வலிமையாக  கையாளப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.. உங்களால் திறமையாக ஆட்சி புரிய முடியாது என்று ஆங்கிலேயர் காந்தியிடம் திமிரோடு சொல்வார். அதற்கு காந்தி, எங்கள் ஆட்சி மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, வேறு நாட்டினர் எங்களை ஆட்சி செய்வதை விரும்பவில்லை என்று அதிரடியாக பதில் சொல்வது நெஞ்சை தொடும்.

Tamil Hollywood Gandhi Movie Review 2நேதாஜி, அம்பேத்கர் போன்ற மாவீரர்கள் பற்றி போதுமான அளவில் படத்தில் காட்டப்படவில்லை, நேருவின் கதாபாத்திரம் வேண்டுமென்றே தவறாக ஜோடிக்கப்பட்டது என்றெல்லாம் சில விமர்சனங்கள் இருந்தாலும், ஒவ்வொரு இந்தியனும் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் இது. மேலும் ஒரு நிஜ மனிதனின் வாழ்க்கை வரலாற்றை இதைவிட சிறப்பாக யாராலும் படமாக்கமுடியாது என்ற வகையிலும் காலத்தை வென்ற படமாகிறது காந்தி. இந்தப் படத்தை ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தியர்கள் பார்க்கவேண்டும், அப்போதுதான் நாட்டை பற்றியும் நம் தலைவர்கள் பற்றியும் மனதில் பெருமை இருக்கும்.

IMDB : 8.1

நமது மதிப்பெண் : 83

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

  • 1960ம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளரான லூயிஸ் பிஷர் எழுதிய மகாத்மா காந்தியின் வாழ்க்கைதான், இந்த படம் எடுக்கத் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் அட்டன்பரோ.
  • இந்தப் படம் எடுப்பதற்கு ஜவஹர்லால் நேரு, மவுன்ட்பேட்டன் பிரபு மற்றும் மோதிலால் கோத்தாரி ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள் என்றும் கூறியிருக்கும் அட்டன்பரோ, 20 ஆண்டு காலம் இந்தப் படத்திற்காக தீவிரமாக உழைத்திருக்கிறார்.
  • 1982ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 8 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. அதோடு நில்லாமல் உலகெங்கும் வசூல் சாதனையும் புரிந்தது.
  • பிரிட்டிஷ் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் அட்டன்புரோ, உலகை உலுக்கிய ஜுராசிக் பார்க் படத்தில் டயனோசர் பார்க் உருவாக்கியவராக வரும் கிழட்டு விஞ்ஞானி இவர்தான்.

Gandhi is a 1982 epic biographical film which dramatises the life of Mohandas Karamchand Gandhi, the leader of India’s non-violent, non-cooperative independence movement against the United Kingdom’s rule of the country during the 20th century. Gandhi was written by John Briley and produced and directed by Richard Attenborough. It stars Ben Kingsley in the title role. The film covers Gandhi’s life from a defining moment in 1893, as he is thrown off a South African train for being in a whites-only compartment, and concludes with his assassination and funeral in 1948. Although a practising Hindu, Gandhi’s embracing of other faiths, particularly Christianity and Islam, is also depicted.

Gandhi was released in India on 30 November 1982, in the United Kingdom on 3 December, and in the United States on 10 December. It was nominated for Academy Awards in eleven categories, winning eight, including Best Picture. Richard Attenborough won for Best Director, and Ben Kingsley won for Best Actor. The film was screened retrospective on 12 August 2016 as the Opening Film at the Independence Day Film Festival jointly presented by the Indian Directorate of Film Festivals and Ministry of Defense, commemorating 70th Indian Independence Day.

Gandhi Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 226 times, 48 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>