பாக்காம விட்றாதீங்க – த பியானிஸ்ட் (The Pianist)

Tamil Hollywood The_Pianist_movie poster

இனப்படுகொலை உலகெங்கும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த இனப்படுகொலைகளின் உச்சம் என்றால் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த யூத படுகொலையைத்தான் சொல்லவேண்டும். இந்த படுகொலையை வரலாற்றில் ஹோலோகாஸ்ட் என்று பெயரிட்டு அழைத்தார்கள். ஹிட்லரின் நாஜி படையினர் லட்சக்கணக்கான யூதர்களை கொன்றொழித்த சம்பவங்களையொட்டி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும், இசைக்கலைஞன் பார்வையில் படுகொலையை காட்டியிருக்கும் தி பியானிஸ்ட் படத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இந்தப் படத்தை இயக்கிய ரோமன் பொலான்ஸ்கியும் யூதர் என்றாலும், பாரபட்சமில்லாமல் உண்மையின் பக்கத்தில் இருந்து காட்டியதாக பாராட்டப்படுபவர்.

போலந்து நாட்டை சேர்ந்த லாட்ஸ்லா ஸ்பில்மென் இசை தவிர குறிப்பாக பியானோ தவிர வேறொன்றும் அறியாதவன். சிறந்த இசைக்கலைஞன் என்பதால் நல்ல அங்கீகாரத்துடன் மேல்மட்ட வசதியான வாழ்க்கை வாழ்கிறான். நண்பர்கள், குடும்பம் என்று சந்தோஷமாக வாழ்க்கை நகர்கிறது. இரண்டாம் உலகப்போர் நடந்துகொண்டு இருந்தாலும் அதுபற்றி எந்த அக்கறையும் இல்லாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கிறான். ரேடியோ நிலையத்தில் குண்டு வீசப்பட்டு தகர்க்கப்பட்ட பிறகே, வேறு வழியின்றி அங்கிருந்து நகர்கிறான்.

ஊரெங்கும், வீடெங்கும் போரின் அவலம் எதிரொலிக்கிறது. தான் வசித்துவந்த வீடு, வேலை அனைத்தையும் இழந்து குடும்பத்துடன் யூதர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படுகிறான் ஸ்பில்மென். யூதர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதுடன், இவர்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக கைகளில் நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்ட ரிப்பன் கட்டப்படுகிறது. உணவு, உடை, கம்பளி, டாய்லெட் வசதி இல்லாமல் யூதர்கள் அவஸ்தைப்படுகிறார்கள்.  குடியிருப்புக்குக்கு அந்தப் புறம் இருந்து மனிதாபிமானத்துடன் வீசப்படும் உணவுகளை பிடித்துத் தின்பதற்கு கடுமையான போட்டி நடக்கிறது.

Tamil Hollywood The_Pianist_1நாஜி சிப்பாய்கள் வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது. தங்கள் இஷ்டத்துக்கு யூதர்களை ஆட்டுவிக்கிறார்கள், அராஜகம் செய்கிறார்கள். விளையாட்டுத்தனமாக மனிதர்களை குறிவைத்து சுட்டுக்கொல்வது சாதாராண நிகழ்வாக நடக்கிறது. குடியிருப்புகளில் இருந்து தப்பியோடுபவர்களை மிருகத்தனமாக அடித்து கொலை செய்கிறார்கள். சாலையில் கிடக்கும் உணவை நாய் போன்று வாயால் தின்னவேண்டிய கொடுமைக்கும் யூதர்கள் ஆளாகிறார்கள். எதற்காக அத்தனை யூதர்களும் இங்கே அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் காலம் நகர்கிறது.

அப்போது ஒரு புகைவண்டி நகரத்திற்கு வருகிறது. இந்த முகாமில் இருந்து தப்பிக்க நினைக்கும் யூதர்கள் இந்த ரயிலில் ஏறி சென்றுவிடலாம் என்று அறிவிக்கப்படுகிறது. உடனே முண்டியடித்து யூதர்கள் அந்த ரயிலில் ஏறுகிறார்கள். எப்படியோ கஷ்டப்பட்டு அந்த ரயிலில் ஏறிவிடும் ஸ்பில்மெனை ஒரு நாஜி திடீரென வெளியே இழுத்து வீசுகிறான். தன்னுடைய அத்தனை முயற்சியும் வீணாகிவிட்டது என்று ஸ்பில்மென் வருத்தமும் கோபமுமாக அந்த சிப்பாயை பார்க்கிறான். மடையா, உன்னை நான் காப்பாற்றியிருக்கிறேன், உடனடியாக இங்கிருந்து ஓடிப்போய் தப்பித்துக்கொள் என்கிறான் அந்த நாஜி. அப்போதுதான், ஹிட்லரின் ஆணைப்படி ரயிலில் செல்பவர்கள் எல்லாம் விஷவாயு செலுத்தி கொல்லப்பட இருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவருகிறது.

Tamil Hollywood The_Pianist_3எங்கு போவது என்று தெரியாமல் சுற்றும்போது, பழைய நண்பன் ஒருவன் ஆளில்லாத வீட்டில் ஸ்பில்மென் தங்குவதற்கு இடம் கொடுக்கிறான். ஆனால் அவன் யூதன் என்பதை தெரிந்துகொள்ளும் பக்கத்து வீட்டுப்பெண், இவனை வெளியே விரட்டியடிக்கிறாள். உணவுக்காக அலைகிறான். பியானோ இசைத்த கைகளால் கட்டிட வேலை செய்கிறான். அனுபவமும் பழக்கமும் இல்லாததால் தண்டனைக்கும் ஆளாகிறான்.

இந்த நேரத்தில் ஹிட்லரின் படைகளை எதிர்ப்பதற்காக, யூதர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து வன்முறையில் இறங்குகிறார்கள். நாஜிக்களிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றி படைகளுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். தற்கொலை படையாக மாறி நாஜிக்கள் மீது பாய்கிறார்கள் யூதர்கள். அறைகுறை உயிருடன் செத்துக்கிடக்கும் அத்தனை பேர் மீதும் தீ வைத்து எரிக்கப்படுகிறது.

இந்த வன்முறையை சந்திக்க விருப்பமில்லாமல் திரியும்போது பழைய சினேகதியை சந்திக்கிறான். இசைக்கலைஞியான தோழியும் அவளது கணவனும் இவனை அவர்களது வீட்டுக்குள் ரகசியமாக தங்கவைக்கிறார்கள். அவர்கள் வெளியே செல்லும்போது கதவை பூட்டிவிட்டு போகிறார்கள். உள்ளேயே அடைபட்டு கிடக்கும் ஸ்பில்மெனுக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் மெலிந்து துரும்பாகி உயிர் விடும் நிலைக்குப் போகிறான். அப்போது நடக்கும் பீரங்கி தாக்குதலில், ஸ்பில்மென் தங்கியிருக்கும் வீடு சேதமடைவதால், அங்கிருந்து வெளியேறுகிறான்.

Tamil Hollywood The_Pianist_2கடுமையான தாகம், பசி, நோய் போன்ற கொடுமைகளுடன் செல்லும் ஸ்பில்மென் கண்களில் ஒரு ஜாம் டின் தட்டுப்படுகிறது. ஒரு பிச்சைக்காரனை போன்று அதனை உடைத்து தின்பதற்கு கடுமையாக முயற்சிக்கிறான். அப்போது உருண்டு ஓடும் அந்த டின் நாஜி அதிகாரி வில்ம் கால்களுக்கு இடையே சிக்குகிறது. ஸ்பில்மென் யார் என்று கேட்கிறான் அந்த அதிகாரி. தான் ஒரு இசைக்கலைஞன் என்றதும், அவனை இழுத்துச்சென்று பியானோ வாசிக்கச் சொல்கிறான்.

தனிமை, கொடுமை, பசி, அவமானம் அத்தனையும் மீறி பியானோவில் ஸ்பில்மென் கைகள் காற்றை போல் விளையாடுகின்றன. அற்புதமான இசைக்கு அடிமையாகிறான் ராணுவ அதிகாரி வில்ம். ஸ்பில்மென்னுடன் நட்பு பாராட்டுகிறான். அவனுக்கு தன்னுடைய கோட்டை அன்பளிப்பாக கொடுக்கிறான். ரஷ்ய படைகள் போலந்துக்குள் வந்துவிட்டன, அதனால் இரண்டு நாட்களுக்குள் விடுதலை கிடைத்துவிடும் என்று சொல்லிவிட்டு நகர்கிறான்.

ஒருவழியாக இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய படைகள் தோல்வி அடைகின்றன. நாஜி அதிகாரியின் அங்கியை அணிந்திருப்பதால், அவனை நாஜி என்றே நினைக்கிறார்கள். அவர்களிடம் தான் ஒரு யூதன் என்று சொல்லி விடுதலை பெற்றானா என்பதை திரையில் பாருங்கள்.

அழும் குழந்தையின் வாயை தாய் பொத்துவதால், அந்தக் குழந்தை உயிர் விடுவது, முகாமில் இருந்து தப்பிக்கும் சிறுவனை அந்தப் பக்கம் நாஜிக்களும், இந்தப் பக்கம் யூதர்களும் பிடித்து இழுத்து சிதைப்பது என்று அதிரவைக்கும் காட்சிகள் படமெங்கும் நிறைந்துள்ளன. நிஜ வரலாறு என்பதால் ரயில்வண்டி போல் படம் அசைந்து அசைந்துதான் செல்கிறது என்றாலும், பார்க்கவேண்டிய திரைப்படம். போர்க்கைதிகளின் வலி, வேதனையை உலகறியச் செய்தத்தில் முக்கியமான படமும் இது.

IMDB : 8.5/10

நமது மதிப்பெண் : 76

டிரைலர்  இதோ:

பின்குறிப்பு :

  • ரோமன் போலன்ஸ்கி தயாரித்து, இயக்கி 2002ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றதுடன் வசூலும் அள்ளியது.
  • போலந்து நாட்டை சேர்ந்த யூதரான லாட்ஸ்லா ஸ்பில்மென் இரண்டாம் உலகப்போர் குறிப்புகளாக எழுதிய சுயசரிதையான தி பியானிஸ்ட் புத்தகத்தைத் தழுவி இந்தப் புத்தகம் எடுக்கப்பட்டது.
  • போலந்து திரைப்படங்களை எடுத்து வெற்றியடைந்த பொலான்ஸ்கி அமெரிக்காவில் இருந்தபோது ஒரு சிறுமியை மானபங்கப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. அதனால் ஆஸ்கர் விருது வாங்குவதற்குகூட அமெரிக்க செல்லவில்லை பொலான்ஸ்கி.
  • மஞ்சள் காமாலை நோயில் உடல் மெலியும் காட்சிக்காக ஸ்பில்மென்னாக நடித்த அட்ரியன் பிராடி தன்னுடைய எடையை 14 கிலோ வரை குறைத்து நடித்தார்.
  • இந்தப் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய அட்ரியன் பிராடிதான் 29 வயதில் அதாவது குறைந்த வயதில் ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர்.

The Pianist is a 2002 historical drama film co-produced and directed by Roman Polanski, scripted by Ronald Harwood, and starring Adrien Brody. It is based on the autobiographical book The Pianist, a World War II memoir by the Polish-Jewish pianist and composer Władysław Szpilman. The film was a co-production between France, the United Kingdom, Germany, and Poland. The Pianist Movie Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 340 times, 62 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>