67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

Max_Mad_Fury_Road_Newest_Poster

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு  –  விமர்சனம்

எதிர்காலத்தில் உலகப்போர் நடப்பதாக இருந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று விஞ்ஞானிகளும் வரலாற்று ஆய்வாளர்களும் உறுதியாகச் சொல்கிறார்கள். இதையே தன்னுடைய சாகசபாணியில் அதிரடியாக சொல்லி உலகத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து கல்லா கட்டியிருக்கிறது ‘மேட் மேக்ஸ்’ படத்தின் நான்காம் பாகமான ‘மேட் மேக்ஸ் ஃபியூரி ரோடு’. ஏற்கெனவே வெளியான மூன்று பாகங்களிலும் எரிபொருளை மையமாக வைத்துத்தான்  கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர் ஜார்ஜ் மில்லர். இப்போது தண்ணீரையும் ஐந்து பெண்களையும் சேர்த்துக்கொண்டு  ரசிகனை கனவுக்கும் எட்டாத தூரத்திற்கு அழைத்துச் செல்கிறார் இயக்குனர்.

Mad Max: Fury Road

மூன்று வேளை சாப்பாடு, போட்டுக்கொள்ள ஆடை, தங்குவதற்கு வீடு என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத எதிர்கால கற்காலத்தில் கதை நடக்கிறது. அந்த உலகத்தின் அத்தியாவசியத் தேவையான தண்ணீரும் எரிபொருளும்  வில்லன் இம்மார்ட்டன் ஜோவின் கைகளில்தான் இருக்கிறது. அதனால் அவன் வைத்ததுதான் சட்டம். அவனிடம் கைதியாக சிக்கியிருக்கும் நாயகன் மேக்ஸ், தப்புவதற்கு முயற்சிக்கும் முதல் காட்சியே இதயத்தை எகிறவைக்கிறது.

Mad Max: Fury Road

எரிபொருளை எடுத்துவருவதற்காக வில்லன் கூடாரத்தில் இருந்து வெளியேறுகிறாள் அடிமைகளில் ஒருத்தியான நாயகி பியூரியோஸா. அவள் வெளியேறிய பிறகுதான் தப்பித்துச்செல்கிறாள் என்பது வில்லனுக்குத் தெரிகிறது. அவள் போனது மட்டுமின்றி வில்லனின் ஐந்து ஆசை நாயகிகளையும் (மகாபாரதத்தை உல்டா பண்ணிட்டானோ…) விடுதலை செய்து அழைத்துச்செல்கிறாள். கோபம் தலைக்கு ஏறுவதற்கு இத்தனை காரணங்கள் போதாதா நம் வில்லனுக்கு,  உடனே  தன்னுடைய ஆட்களை அழைத்துக்கொண்டு நாயகியை அழித்து, ஆசை நாயகிகளை மீட்டுவரக் கிளம்புகிறான். தான் இல்லாத நேரத்தில் கைதிகள்  பிரச்னை செய்துவிடலாம் என்பதால் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.

Mad Max: Fury Roadநாயகியை நெருங்கும்போது பாலைவனத்தில் வீசும் கொடூரமான மணல்புயலில் அனைவரும் சிக்கி சின்னாபின்னமாகிறார்கள். அப்போது அடிமையாக இருக்கும் மேக்ஸை, சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுகிறாள் நாயகி பியூரியோஸா. மொட்டையும் மொட்டையும் சேர்ந்தபிறகு என்ன நடக்கும் என்பதைச் சொல்லவேண்டுமா? எதிர்களைத் தூக்கிப்போட்டு பந்தாடுகிறார்கள். கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ள வாகனங்களும் ஆயுதங்களும் பிரமிக்க வைக்கின்றன. புதுமையான சண்டைக் காட்சிகளை வடிவமைப்பதற்காக ஒலிம்பிக் வீரர்களும், உலகின் தலைசிறந்த சர்க்கஸ் கலைஞர்களும் இந்தப் படத்தில் இணைந்து பணி புரிந்திருக்கிறார்கள். நமீபியாவின் பாலைவனங்களில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் நாம் இதுவரை பார்த்தறியாத ஒரு உலகை  அறிமுகம் செய்கின்றன.

அதுசரி,  அந்த அஞ்சே அஞ்சு பொண்ணுங்களுக்காக  வில்லன் ஏன் இத்தனை ரிஸ்க் எடுக்கிறான் என்று யாரும் லாஜிக் பேசக்கூடாது என்பதற்காக ஒரு பலமான ரத்தக்கதையும் பின்னணியில் இருக்கிறது.  டிராஃபிக் இல்லாத ரோட்டில் 50 கிலோமீட்டருக்கு மேல் வண்டியை ஓட்டுவதில் ஆனந்தம் அடையும் ஒவ்வொரு நபருக்கும் இந்தப் படம் பெரும் கிளர்ச்சி (இந்த வார்த்தைப் பிரயோகம் சரிதானே) கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Mad Max: Fury Road

முன்கதை: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் 1979-ல் வெளியான `மேட் மேக்ஸ்’ முதல் பாகத்தில் ‘பிரேவ் ஹார்ட்’ புகழ் மெல் கிப்ஸன் நடித்தார்.  அப்போது நிலவிய எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தைத் தொட்டால் என்ன நடக்கும் என்பதைவைத்து கதை பின்னப்பட்டிருந்தது.   குருட்டுத்தனமான துணிச்சல் மிகுந்த நாயகன் வேண்டும் என்றுதான் மெல் கிப்ஸனை தேர்வு செய்திருந்தார். கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களை நம்பாமல், நிஜமாகவே வாகனங்களை மோதவைத்து படமாக்கியதால் ரசிகர்கள் இதயத்தைத் தொட்டது.  இந்தப் படத்தின் அசுரவெற்றியால் அடுத்த பாகம் 1981-ல் வெளியானது. முதல் படத்தைவிட இந்தப் படம் அதிரிபுதிரியாக ஹிட் அடிக்கவே 1985-ம் ஆண்டு மூன்றாம் பாகம் வெளியானது. இதுவும் சூப்பர் ஹிட்.

Mad Max: Fury Road

அதன்பிறகு ஏகப்பட்ட காரணங்களால் (?)  30 வருடங்கள் கழித்து மேட் மேக்ஸ் நான்காம் பாகம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இதன் இயக்குனர் ஜார்ஜ் மில்லருக்கு இப்போது 70 வயது. வில்லனாக நடித்திருக்கும் ஹு கீய்ஸ்-பைரன்னுக்கு வயசு 67. இந்தப் பாகத்திலும் நடித்திருக்க வேண்டியவர் மெல் கிப்ஸன்தான். ஆனால் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படவே  டாம் ஹார்டி ஹீரோவாகி இருக்கிறார்.

மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு  – டிரேய்லர்

(Visited 478 times, 42 visits today)

Related posts

2 thoughts on “67 வயசு தாத்தாவும் அஞ்சு ஆசை நாயகிகளும்

  1. […] சொல்கிறான் ஜான் ஃபிட்ஸ்ஹெர்ல்ட் (Mad Max Hero Tom Hardy). இருவருக்கும் மோதல் […]

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>