கொஞ்சம் ஜிவ்வு, கொஞ்சம் ஜவ்வு – ரூம் – 42 மார்க் (Room Movie Review)

Room poster

விமர்சனம் – ரூம் :

தனியறைக்குள் அடைத்து கொடுமைப்படுத்தும் சைகோ படங்கள் நிறையவே பார்த்துவிட்டோம். அந்த சைகோ எப்படிப்பட்ட கொடியவன் என்பதை காட்டாமல், அறைக்குள் அடைபட்டிருக்கும் அம்மா, மகன் மனநிலை எப்படியிருக்கும் என்று காட்டியவகையில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது ரூம்.  அம்மாவும் மகனும் சிரமப்பட்டு தப்பியபிறகு ஏற்படும் மனநிலை பிறழ்வை காட்டி ஜவ்வடிக்கும்போது, நிறையவே சலிப்பும் வருகிறது. ஆனாலும், ஆஸ்கர் விருது வாங்கியிருக்கும் பிரி லார்சன் மற்றும் குட்டிப்பையன் ஜேகப் டிரெம்பிளே நடிப்புக்காகவும் பார்க்க வேண்டிய படம் ரூம்.

Room 8காலை கண் விழித்ததும் டி.வி., பெட், சேர், தலையணை, ஷிங்க், பிளேட், கிளாஸ் என கண்ணில் கண்ட அத்தனை பொருட்களுக்கும் குட்மார்னிங் சொல்கிறான் ஜாக். ஆண் பிள்ளையின் பெயராக இருந்தாலும் பெண் பிள்ளை போல் முடி வளர்ந்து தொங்குகிறது. அம்மா ஜாய் அவனுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறாள், குளிக்கிறாள், விளையாடுகிறாள், கதை சொல்கிறாள், பாலூட்டுகிறாள். ஆனால் இவை எல்லாமே ஒரே அறைக்குள் நிகழ்கிறது. தலைக்கு மேல் ஒரே ஒரு கண்ணாடி ஜன்னல் மட்டுமே இருக்கும் 10க்கு10  அறைதான் உலகம் என்று ஜாக் நம்பிக்கொண்டு இருக்கிறான்.

Room 7ஜாக்கை பொறுத்தவரை அம்மா, எறும்பு, கொசு மற்றும் எப்போதாவது எட்டிப் பார்க்கும்  எலி மட்டுமே நிஜம். மற்ற எல்லாமே டி.வி-யில் வரும் பிம்பங்களைப் போன்ற பொய்.  இப்படி சொல்லித்தான் ஜானை வளர்த்துவருகிறாள் ஜாய். ஏனென்றால் ஏழு வருடங்களாக அந்த அறைக்குள் அடிமையாக அடைபட்டு கிடக்கிறாள் ஜாய். தினமும் அவளை சித்ரவதைப்படுத்தி செக்ஸ் அனுபவிக்க இரவு நேரத்தில் மட்டும் வருகிறான் நிக். அந்த அறைக்கு ரகசிய பாஸ்வேர்டு வைத்திருக்கிறான் நிக். இரும்புக்கோட்டை போல் கட்டப்பட்டிருக்கும் அந்த அறைக்குள்தான் ஏழு வருடங்களாக அடைந்து கிடக்கிறாள் ஜாய்.

Room 1வெளியே ஓர் உலகம் இருப்பது தெரியவந்தால் ஜாக் வேதனைப்படுவான் என்பதால், தாங்கள் வாழும் அறைதான் உலகம் என்று நம்பவைத்து வாழ்கிறாள். உயிருடன் மனிதர்கள் இருக்கிறார்கள், மரம் இருக்கிறது, நாய் இருக்கிறது என எதுவுமே ஜாக்கிற்கு தெரியாது.

ஜாக்கிற்கு ஐந்து வயது ஆகிறது. நீ பெரிய பையனாகி விட்டாய் என்று சொல்கிறாள் ஜாய். இருவரும் பர்த்டே கேக் செய்து சாப்பிடுகிறார்கள். அன்றைய இரவு வழக்கம்போல் வந்து கொடுமைப்படுத்துகிறான் நிக். அதோடு நில்லாமல், எனக்கு வேலை போய்விட்டது, அதனால் இனிமேல் உங்களுக்கு செலவழிக்கும் தொகையை குறைக்கப்போகிறேன் என்கிறான்.

Room 5இனியும் தப்பிக்கவில்லை என்றால் இந்த இடத்திலேயே மரணம் அடையவேண்டியதுதான் என்ற முடிவுக்கு வருகிறாள் ஜாய். தப்புவதற்கு ஜாக்கை துருப்புச்சீட்டாக பயன்படுத்த நினைக்கிறாள். உடனடியாக இந்த அறைக்கு வெளியே மாபெரும் உலகம் இருக்கிறது. நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறாள். அம்மா சொல்வதை நம்பமுடியாமல் தவிக்கிறான்.

கொதிக்கும் நீரை துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தடம் கொடுத்து, ஜாக்கிற்கு செயற்கையாக காய்ச்சல் வரவழைக்கிறாள். ஜாக்கை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வான் என்று நினைக்கிறாள். ஆஸ்பத்திரிக்குப் போனதும் ஹெல்ப் என்று உதவி கேட்டு, அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்று ஜாக்கிடம் சொல்லிவைக்கிறாள். ஆனால் ஜாக்கை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லாமல், ஆன்டிபயாடிக் மாத்திரை, மருந்துகள் வாங்கிவருகிறேன் என்று கிளம்பிவிடுகிறான் நிக்.

Room 10இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்த முடிவெடுக்கிறாள் ஜாய். ஜாக் செத்துவிட்டதாக ஒரு கார்பெட்டில் சுற்றி வைக்கிறாள். ஜாக் உடலை டிரக்கில் ஏற்றி கொண்டுசெல்வான். ஏதேனும் ஓர் இடத்தில் டிரக் நிற்கும்போது, கார்பெட்டில் இருந்து வெளியே வந்து உதவி கேட்க வேண்டும் என்று சொல்லித்தருகிறாள் ஜாய். அம்மாவை கொடுமைக்காரியாக பார்க்கிறான் ஜாக். ஆனாலும்  சொல்வதை செய்யவேண்டி இருக்கிறது. அதுபிடிக்காமல், நமக்கு இந்த அறையே போதும் என்று சொல்கிறான் ஜாக். ஆனால், சந்தர்ப்பத்தை விடுவதற்கு ஜாய் தயாராக இல்லை. அதனால் நிக் வரும்போது, ஜாக்கை கார்பெட்டில் சுற்றிவிடுகிறாள்.

ஜாக் செத்துவிட்டான் என்று நம்பிவிடும் நிக், அவனை அப்புறப்படுத்துவதற்காக டிரக்கில் கொண்டுசெல்கிறான். கார்பெட்டில் இருந்து வெளியே வரும் ஜாக், முதன்முதலாக இந்த உலகத்தைப் பார்க்கிறான். மரங்களும், இலைகளும் புத்தம்புதிதாக தெரிகிறது. ஓர் Room 9இடத்தில் டிரக் சிக்னலுக்காக நிற்கிறது. அப்போது அம்மா சொல்லிக்கொடுத்தது ஜாக்கிற்கு ஞாபகம் வருகிறது. வண்டி நிற்கும்போது, எப்படியாவது தப்பித்துச்சென்று யாராவது ஒரு மனிதனிடம் உதவி கேள் என்று சொன்னதை நினைத்து, டிரக்கில் இருந்து கீழே குதிக்கிறான். அதை பார்த்துவிடும் நிக் பிடிக்க வர, அதற்குள் ஓடிப்போய் ஒருவரிடம் உதவி கேட்கிறான். தனக்கு சிக்கல் என்று நினைக்கும் நிக் உடனடியாக தப்பிவிடுகிறான்.

அடுத்து வழக்கம்போல் போலீஸ் வருகிறது. ஜாக் சொல்லும் குறிப்புகளை வைத்து ஜாயை காப்பாற்றுகிறது. எப்படியோ நிக்கை கைது செய்கிறது. இதன்பிறகு கதையின் இரண்டாம் பாகம் தொடங்குகிறது.

Room 4தனியறையில் சந்தோஷமாக இருந்த ஜாக், இத்தனை பெரிய உலகத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறான். தினமும் ஒரே உணவு சாப்பிட்ட ஜாக்கிற்கு விதவிதமான உணவு கிடைக்கிறது. புதுப்புது ஆட்களைப் பார்த்து மிரள்கிறான். மனதளவில் ஜாக் பாதிக்கப்பட்டிருக்கிறான், அவனை வெளியே கொண்டுவருவதற்கு மருத்துவர்கள் போராடுகிறார்கள். அப்போதுதான் இன்னொரு உண்மை தெரியவருகிறது. ஏழு ஆண்டுகளாக தனிமை சிறையில் இருந்த காரணத்தால் ஜாக்கைவிட ஜாய் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். இந்த சிக்கல்களில் இருந்து ஜாய், ஜாக் இருவரும் எப்படி மீண்டார்கள் என்பதுதான் மீதிக்கதை.

Room 6தனியறையில் அடைத்துப்போட்டாலும் நம்பிக்கையுடன் வாழமுடியும் என்று காட்டியிருக்கும் புதிய சிந்தனைக்காகவும், தப்பிக்கும் முயற்சி வெற்றியடையவேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்யுமளவுக்கு பரபரப்பு கொண்டுவந்த வகையிலும் பார்க்கவேண்டிய படம் ரூம். கொஞ்சம் மொக்கை காட்சிகள் நிரம்பியிருந்தாலும், அட்ஜெஸ்ட் செஞ்சுக்கோ சார்.

42 மதிப்பெண்கள்

கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்

பின்குறிப்பு :

*ரூம் என்ற பெயரில் எம்மா டோனோக் எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.

*டி.வி. சீரியல்களும் சில படங்களும் மட்டுமே இயக்கியிருக்கும் லென்னி ஆப்ரஹம்சன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஐந்தாவது படம் இது. இவர் இயக்கிய நான்கு படங்களுக்கும் ஏதாவது விருது வாங்கியிருக்கிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

*இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது வாங்கியிருக்கும் பிரி லார்சன், ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கத் தொடங்கியவர். இசை ஆல்பங்களும் வெளியிட்டிருக்கிறார். சில திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகவும், இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*சிறந்த நடிகைக்கான விருது பிரி லார்சனுக்கு கிடைத்திருக்கிறது என்றாலும் மறக்கமுடியாத நடிப்பு ஜேகப் டிரெம்பிளேயினுடையதுதான். எல்லா பிரச்னைகளும் முடிந்தபிறகு, தான் அடைக்கப்பட்டிருந்த பழைய இடத்துக்குச் செல்லும்போதும், அங்கே இருக்கும் பொருட்களுக்கு குட்பை சொல்லும்போதும் நெஞ்சை அள்ளுகிறான் ஜேகப்.

Room is a 2015 Canadian-Irish drama film directed by Lenny Abrahamson and written by Emma Donoghue, based on her novel of the same name. The film stars Brie Larson, Jacob Tremblay, Joan Allen, Sean Bridgers, and William H. Macy. Held captive for seven years in an enclosed space, a woman (Larson) and her 5-year-old son (Tremblay) finally gain their freedom, allowing the boy to experience the outside world for the first time. Room Review, Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 1,986 times, 53 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>