விமர்சனம் – த ரெவன்னென்ட்:
அவார்டு போதைக்கு ரசிகர்களை ஊறுகாய் ஆக்கியிருக்கிறார் லியோனார்டோ டிகாப்ரியோ. டாம் ஹாங்க்ஸ் நடித்த காஸ்ட் அவே தொடங்கி அப்பல்லோ 13, எவரெஸ்ட் போன்ற ஏகப்பட்ட உயிர் போராட்ட சினிமா பார்த்துவிட்டதாலோ என்னவோ, ஆரம்பம் முதல் இறுதிவரை அலுப்பும் சலிப்புமாக நகர்கிறது ரெவன்னென்ட்.
இனி, கொஞ்சமாக தென்படும் கதைக்குப் போகலாம். 1820களில் கதை நடக்கிறது. காட்டு மிருகங்களை வேட்டையாடி தோல் வியாபாரம் செய்யும் ஒரு கும்பல் காட்டுக்குள் முகாம் போட்டிருக்கிறது. ஏராளமான மிருகங்களை வேட்டையாடி முடித்த நேரத்தில், திடீரென அந்தப் பகுதியை சேர்ந்த செவ்விந்தியர்கள் அதிரடி தாக்குதல் நடத்துகிறார்கள். திடீர் தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் 30 பேர் செத்துப்போக, க்ளாஸ் ஆக வரும் டிகாப்ரியா உள்ளிட்ட 10 பேர் மட்டும் படகில் தப்பிச்செல்கிறார்கள். தொடர்ந்து படகில் செல்வது ஆபத்து என்பதால், காட்டு வழியே நடந்துசெல்வதே பாதுகாப்பு என்கிறான் க்ளாஸ். படகுதான் பாதுகாப்பு என்று சொல்கிறான் ஜான் ஃபிட்ஸ்ஹெர்ல்ட் (Mad Max Hero Tom Hardy). இருவருக்கும் மோதல் முற்றினாலும் குழுவினர், க்ளாஸ் சொல்வதை கேட்டு காட்டுக்குள் இறங்குகிறார்கள்.
காட்டுக்குள் செல்லும்போது பிரமாண்டமான கரடியின் தாக்குதலுக்கு ஆளாகிறான் க்ளாஸ். தொண்டை, முதுகு, கை, கால்களில் கடுமையாக காயப்பட்டிருக்கும் க்ளாஸ் எந்த நேரமும் மரணம் அடையலாம் என்று நினைக்கிறார்கள். அதேநேரம் சீதோஷ்ணமும் மிகவும் கொடுமையாக மாறிவிடவே, க்ளாஸை தொடர்ந்து தூக்கிச்செல்ல சிரமப்படுகிறார்கள். அதனால் ஹாக், ஜான், பிரிட்ஜர் மூவரும் க்ளாஸுக்கு காவல் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்யப்படுகிறது. க்ளாஸ் குணமடையமுடியவில்லை என்றால் அவனை, நல்லடக்கம் செய்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டு குழுவில் உள்ள மற்றவர்கள் முன்னேறி செல்கிறார்கள்.
கை, கால்களை அசைக்க முடியாத க்ளாஸுக்கு காவல் இருப்பது தனக்கே ஆபத்தாக மாறிவிடும் என்று நினைக்கிறான் ஜான் ஃபிட்ஸ்ஹெல்ர்ல்ட். அதனால் யாருமற்ற நேரத்தில் க்ளாஸை கொல்வதற்கு முயற்சிக்கிறான். இதை பார்த்துவிடும் க்ளாஸின் மகன் ஹேக், ஜானை தாக்குகிறான். ஆனால் போராட்டம் திசை மாறுகிறது. க்ளாஸ் கண்ணெதிரே ஹாக்கை கொலை செய்துவிடுகிறான் ஜான். தன்னுடைய கண்ணெதிரே மகன் கொலை செய்யப்படுவதைப் பார்த்து கையாளாகாத நிலையில் எதுவுமே செய்யமுடியாமல் கண்ணீர் சிந்துகிறான் க்ளாஸ்.
நிலைமையை சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான் ஜான். அதனால் விஷயம் தெரியாத பிரிட்ஜரிடம் எதிரிகள் நெருங்கிவிட்டார்கள், இனியும் க்ளாஸுக்கு காவல் இருப்பது முட்டாள்தனம் என்று பொய்சொல்லி ஏமாற்றி அழைத்துச்செல்கிறான் ஜான். தனிமையில் கிடந்தாலும் மனவுறுதியுடன் இருக்கிறான் க்ளாஸ். கொட்டும் பனியில் ஒரு நாள் முழுவதும் மகனுடைய உடல் மீது கிடக்கிறான். ஃபிட்ஸ்ஹெர்ல்ட்டை பழிவாங்கும் உணர்ச்சி உள்ளத்தில் கொளுந்துவிட்டு எரியவே, தவழ்ந்து தவழ்ந்து முன்னேறத் தொடங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறி அடர்ந்த காட்டுக்குள் உயிர்வாழும் போராட்டத்தை தொடங்குகிறான் க்ளாஸ்.
கரடி கடித்துவிட்டதால் க்ளாஸின் தொண்டையில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையினால், வாய் வழி சாப்பிடும் உணவு தொண்டை வழியே வெளிவருகிறது. அந்தப் புண்ணை ஆற்றுவதற்காக தனக்குத்தானே விசித்திரமான வைத்தியம் செய்துகொள்கிறான் க்ளாஸ். அபாயமும் ஆபத்தும் நிறைந்த பனிக்காடுகளில் இருந்து தப்பித்து எப்படி எதிரியை பழி தீர்த்தான் க்ளாஸ் என்பதுதான் மீதிக் கதை.
படத்திற்காக எவ்விதமான செட்டும் போடாமல், நிஜமான லொக்கேஷன்களில் சூட்டிங் நடத்தப்பட்டது என்பது இந்தப் படத்தின் சிறப்பு. அதேபோல் காட்சிகள் கோர்வையாக வரவேண்டும் என்பதற்காக, சினிமாவில் காணும் வரிசையிலே சூட்டிங் செட்யூல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை சிறப்புகள் இருந்தாலும், படம் நத்தை போல் நகர்வதும், அனைத்து காட்சிகளும் ஏதோ ஒரு படத்தில் பார்த்ததுபோன்ற உணர்வு இருப்பதும் எரிச்சலை வரவழைக்கிறது.
க்ளாஸுக்கு உதவி செய்யும் மனிதர்களில் இருந்து குதிரை வரை எல்லாமே பட் பட்டென்று செத்துப்போய்விட, க்ளாஸ் மட்டும் மலை உச்சியில் இருந்து விழுந்தாலும்… சாதாரணமாக எழுந்து நடக்கும் செயற்கைத்தனம் படம் முழுக்க விரவியிருப்பதால்… பாக்கவே பாக்காதீங்க.
டி காப்ரியோ ரசிகர்களுக்கு : 46 மதிப்பெண்கள்
மற்ற ரசிகர்களுக்கு : 34 மதிப்பெண்கள்
கொஞ்சம் ரசிக்க – டிரெய்லர்
கொஞ்சம் தெரிஞ்சிக்க – மேக்கிங்
பின்குறிப்பு :
*மைக்கேல் ப்ங்கே எழுதிய நாவலைத் தழுவி இந்தப் படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
*21 கிராம்ஸ், பேர்ட்மேன் போன்ற படங்களின் மூலம் பிரபலமான அலெக்சாந்ட்ரோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
*டிகாப்ரியோவுக்கு விருது வாங்கித்தர வேண்டும் என்ற நோக்கம் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புதான் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையிலும் தெரியவே இல்லை. அதனால் டிகாப்ரியோவுக்கு இந்த வருடமும் ஆஸ்கர் கோயிந்தா கோயிந்தா…
—
The Revenant is a 2015 American frontier survival and revenge film directed by Alejandro G. Iñárritu. The screenplay by Mark L. Smith and Iñárritu is based in part on Michael Punke‘s novel with the same title, which is inspired by the experiences of frontiersman and fur trapper Hugh Glass in 1823 in what is now Montana and South Dakota. It stars Leonardo DiCaprio as Glass, and co-stars Tom Hardy, Domhnall Gleeson and Will Poulter. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood