சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

elysium_poster

பாக்கவே பாக்காதீங்க – எலிசியம்:

மரணத்துக்குப் பிறகு நல்ல மனிதர்கள் அனைவரும் வாழும் இடமாக கிரேக்க இதிகாசங்களில் குறிப்பிடப்படுவதுதான் எலிசியம். திகட்டத்திகட்ட இன்பம் மட்டுமே ஆட்சிபுரியும் எலிசியத்தில் நோய்க்கும் துன்பத்திற்கும் இடம் இல்லை. நிஜமாகவே இப்படி ஒரு இடம் இருந்தால் எப்படியிருக்கும் என்ற ஒரு வரி கதையை இரண்டு மணி நேரத்துக்கு நீட்டி முழக்கினால், அதுதான் எலிசியம் என்ற அறிவியல் புனைவு திரைப்படம். வித்தியாசமான திருப்பங்கள் எதுவும் இல்லாமல் சவசவவென நகர்வதால் எலிசியம் பார்க்கத்தேவையில்லாத பட்டியலில் சேர்கிறது. இனி கதை.

elysium 7நம்மூரில் படித்தவர்கள் எல்லோரும் அமெரிக்காவுக்குப் போய் ராஜபோக வாழ்க்கை வாழ்வதற்கு ஆசைப்படுவதைப் போல, 2154-ம் ஆண்டு வசிக்கும் மக்கள் எலிசியம் போகவேண்டும் என்ற கனவுடன் வாழ்கிறார்கள். எலிசியம் என்பது பூமிக்கு வெளியே பணக்காரர்களால், பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்ட செயற்கை விண்வெளி நிலையம். அங்கே பணக்காரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். எல்லோரும் ஆடிப்பாடி சந்தோஷமாக காலம் தள்ளுகிறார்கள். இவர்களுக்காக பூமியில் மக்கள் உழைக்கிறார்கள். அனைத்து வசதிகளும் பணக்காரர்களுக்கு எலிசியத்தில் கிடைப்பதால் சந்தோஷமாக வாழ்கிறார்கள். அங்கே  நோய்களை எல்லாம் ஒரு நொடியில் அகற்றிவிடுகிறார்கள்.

elysium 1அதனால் எலிசியம் போகவேண்டும் என்பதுதான் பூமியில் வாழும் மற்ற மக்களின் கனவாக இருக்கிறது. பணக்காரர்கள் எல்லாம் எலிசியம் போய்விட, பூமியில் தொழிலாளர் இனம் மட்டுமே இருக்கிறது. பசி, பஞ்சம், பட்டினி, சுகாதாரமின்மை, ஏழ்மை, வேலையில்லா திண்டாட்டத்துடன் மக்கள் தவிக்கிறார்கள். ஒரு அனாதை சிறுவனாக, திருடனாக ஒரு சர்ச்சில் அடைக்கலமாகிறான் மேக்ஸ். அங்கே சிறுமியாக இருக்கும் ஃபிரேயிடம் எலிசியத்துக்கு அழைத்துச்செல்வதாக வாக்கு கொடுக்கிறான்.

elysium 3எலிசியம் அற்புதமான உலகமாக இருந்தாலும், அங்கே கட்டுப்பாட்டை மீறி திருட்டுத்தனமாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள் ஜோடி ஃபாஸ்டர். திருட்டுத்தனமாக குடியேறுவதற்காக விண்கலத்தில் வருபவர்களை சுட்டுக் கொன்றும், கைதியாக்கி திருப்பியனுப்பவும் செய்கிறாள். இந்த உலகத்தை பூமியில் வாழும் சாதாரண மக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது தன்னுடைய கடமை என்று நம்புகிறாள். அதற்காக கொடூரமான கொலைகாரன் குரூகரை (ஷார்ல்டோ கோப்லே) பாதுகாவலனாக நியமிக்கிறாள்.

elysium 2மேக்ஸ் (மாட் டாமன்)  இளைஞன் ஆனதும் இயந்திர போலீஸ்காரர்களைத் தயாரிக்கும் ஆலையில் பணியாற்றுகிறான். தன்னுடைய வருமானத்தை எல்லாம் சேர்த்துவைக்கிறான். எலிசியத்துக்கு செல்லவேண்டும் என்ற கனவை இன்னமும் விடாமல் இருக்கிறான். இந்த நேரத்தில் மேக்ஸ் பணியாற்றும் ஆலையில் ஒரு விபத்து நேர்கிறது. கதிர்வீச்சு மேக்ஸ் மீது பாயவே, இன்னமும் ஐந்து நாட்களில் மேக்ஸ் மரணம் அடைவது நிச்சயமாகிறது. எலிசியம் போனால் மட்டுமே உயிர் வாழமுடியும் என்பதால் அங்கே திருட்டுத்தனமாக நுழைவதற்கு என்ன வழி என்று யோசிக்கிறான்.

elysium 12ரோபோட் தயாரிக்கும் ஆலையின் நிர்வாகியாக இருக்கும் ஜான் கார்ல்யேல் (வில்லியம் ஃபிட்ச்னர்) மூளையில் பதிவாகியிருக்கும் தகவல்களை திருடிவந்தால், எலிசியம் அழைத்துச்செல்வதாக வாக்கு கொடுக்கிறான் ஸ்பைடர் (வாக்னர் மோரா). வேறு வழியின்றி கார்ல்யேலை தாக்கி அவன் மூளையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, தன்னுடைய மூளைக்கு பதிவிறக்கம் செய்கிறான் மேக்ஸ். அந்த நேரத்தில் கொடூரமான கொலைகாரன் குரூகர் வந்துவிட, கடுமையான மோதல் நடக்கிறது. மேக்ஸ் தலையில் இருக்கும் தகவலை எடுத்துவிட குரூகர் முயற்சிக்க, தப்பியோடுகிறான் மேக்ஸ். சின்ன வயதில் சந்தித்த ஃபிரே,  நர்ஸாக இருப்பதை அறிந்து அவளிடம் சிகிச்சைக்காக நுழைகிறான். அப்போதுதான் அவளுக்கு ஒரு மகள் இருப்பதும், அவள் கொடுமையான புற்று நோயினால் பாதிக்கப்பட்டு மரணமடையும் தருவாயில் இருப்பதும் தெரியவருகிறது.

elysium 10தன்னால் ஃபிரேவுக்கு பாதிப்பு வரக்கூடாது என்று தப்பியோடினாலும், அவளும் அவள் குழந்தையும் கொலைகாரர்கள் கையில் பிணைக்கைதியாக சிக்குகிறார்கள். அதன்பிறகு வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வருவதுபோல் மேக்ஸ் காப்பாற்ற வருகிறான். தன்னை எலிசியம் அழைத்துச்சென்றால் தலையில் இருக்கும் தகவல்களை எடுத்துக்கொள்ளலாம் என்கிறான். அதனால் மேக்ஸுடன் ஃபிரே மற்றும் அவளது குழந்தையையும் அழைத்துச்செல்கிறார்கள்.

elysium 4வில்லன் என்பதால் விண்கலத்தில் செல்லும்போது ஃபிரேயிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான் குரூகர்.  நாயகன் என்பதால் கோபமாகிறான் மேக்ஸ். வழக்கம்போல் சண்டை ஆரம்பமாகிறது. இந்த சண்டையில் வெடிகுண்டு வெடித்து குரூகரின் முகம் கன்னாபின்னாவென்று சிதைகிறது. முகம் சிதைந்தாலும் மூளை சிதையவில்லை, அதனால் ஒட்டவைத்துவிடலாம் என்று எலிசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கே ஒரு நொடியில் மீண்டும் பழைய முகத்துடன் எழுந்துவிடுகிறான் குரூகர்.

elysium 9எலிசியத்தை யார் கைப்பற்றுவது என்று போட்டி அங்கே ஆரம்பமாகிறது. குரூகர் உதவியுடன் ஜோடி பாஸ்டர்  ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி எடுக்கிறாள். ஆனால் ஜோடியை கொன்றுவிட்டு, ஆட்சியை கைப்பற்ற குரூகர் நினைக்கிறான். இந்த நேரத்தில் மேக்ஸ் தலையில் இருக்கும் தகவலை பெறுவதற்காக பூமியில் இருந்து ஸ்பைடரும் அவன் குழுவினரும் வந்து சேர்கிறார்கள்.

elysium 8எலிசியத்தை கைப்பற்றியது யார்? தலையில் இருக்கும் தகவலை எடுத்துவிட்டால் மேக்ஸ் இறந்துவிடுவான் என்ற நிலையில், தகவலை கைப்பற்றினார்களா? ஃபிரேயின் குழந்தைக்கு உடல் சரியானதா என்பது போன்ற மில்லியன் டாலர் கேள்விகளுக்குப் பதில் என்னவென்று உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். தெரியவில்லை என்றாலும் படம் பார்த்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நம் தமிழ் படங்களில் நடப்பதுபோலவே எல்லாமே நல்லபடியாக நடந்துமுடிகிறது.

elysium 11அறிவியல் கதை என்றாலும் காதில் பூ சுற்றுவதற்கு அளவில்லாத வகையில் காட்சி அமைப்பு செய்திருக்கிறார்கள். ஒரு கண்ணாடி பெட்டிக்குள் வைத்த அடுத்த நொடியே தீவிர புற்றுநோய் குணமாவதும், சிதைந்துபோன முகம் ஒன்றுசேர்வதும் கற்பனை வறட்சியைத்தான் காட்டுகிறது. படத்தின் முதல் காட்சியிலேயே முழுப்படத்திலும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்துவிடுவதால் நீளமாக கொட்டாவிதான் வருகிறது.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கதாசிரியரும் இயக்குனருமான நீல் புலோம்காம்ப், இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் தயாரிப்பிலும் கைகோத்திருக்கிறார். இவர் டிஸ்ட்ரிக் 9 படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர்.

* 2013-ம் ஆண்டு படம் வெளியீட்டின்போது, இந்தப் படத்தின் கதையில் சில ஓட்டைகள் இருக்கின்றன என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு பேசினார் நீல் புலோம்காம்ப்.

* படத்தின் நாயகன் மேட் டாமன் என்னதான் உயிரைக்கொடுத்து நடித்திருந்தாலும் எடுபடவே இல்லை. த ரெயின் மேக்கர், சேவிங் பிரைவேட் ரயன், போன்ற படங்களில் நடித்தவரா இப்படியொரு மொக்கை படத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.

* படத்தில் ஓரளவு சுறுசுறுப்பாக நடித்திருப்பவர் ஜோடி பாஸ்டர் மட்டும்தான். மூன்று வயதிலேயே நடிக்கவந்த ஜோடியை, சைலன்ஸ் ஆஃப் த லேம்ப்ஸ் படம் சூப்பர் நடிகையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

Elysium is a 2013 American science fiction action thriller film written and directed by Neill Blomkamp. It stars Matt Damon, Jodie Foster, Alice Braga and Sharlto Copley. The film takes place on both a ravaged Earth, and a luxurious space habitat (Stanford torus design) called Elysium. It explores political and sociological themes such as immigration, overpopulation, health care,exploitation, the justice system, and social class issues. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Don’t Watch, At Your Risk, Tamil Hollywood.

(Visited 296 times, 41 visits today)

Related posts

One thought on “சொர்க்கம் அல்ல நரகம் – எலிசியம் (Elysium)

Leave a Reply to ஜீனியஸ் இல்லே, அதுக்கும் மேல – குட் வில் ஹன்டிங் (Good Will Hunting) | Tamil Hollywood Cancel reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>