மூளைக்கு சவால் – சோர்ஸ் கோட்

source code poster

பாக்காம விட்றாதீங்க – சோர்ஸ் கோட்:

தூக்கத்தில் இருந்து கண் விழிக்கும்போது,  ரயில் பயணத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை பார்த்தேயிராத ஆனால் அழகே உருவான ஒரு பெண் எதிரே அமர்ந்திருக்கிறாள். நீண்டநாள் பழகியவளைப்  போன்று  உங்களுடன் இயல்பாகப் பேசுகிறாள். யார் இவள், இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் கண்ணாடியில் பார்த்தால், உங்கள் முகத்துக்குப் பதிலாக வேறு ஒருவரது முகம் தென்படுகிறது. உங்கள் சட்டைப்பையில் இருக்கும் அடையாள அட்டையைப் பார்த்தால், அதிலும் வேறு ஒரு நபரின் பெயரும் படமும்தான் இருக்கிறது. ஏன் இத்தனை குழப்பம் என்று பதட்டப்படும் நொடியில், திடீரென அந்த ரயில் வெடிவிபத்துக்கு உள்ளாக, அத்தனை பேரும் செத்துப் போகிறார்கள். அடுத்த நொடியில் வேறு ஒரு இடத்தில் உயிருடன் மூச்சுக்காக போராடுகிறீர்கள். இப்படியொரு அட்டகாசமான ஆரம்பம் கொடுத்ததற்காகவே பார்க்கவேண்டிய பட பட்டியலில் சேர்கிறது சோர்ஸ் கோட். இனி கதைக்குள் நுழையலாம்.

Source Code 1அமெரிக்க ராணுவப் படையில் கேப்டனாக இருந்த கோல்டர் ஸ்டீவன்ஸாக வருகிறான் ஜேக் ஜிலன்ஹால். கோல்டருக்கு கடைசியாக ஆப்கானிஸ்தானில் போர் புரிந்த ஞாபகம் மட்டுமே  இருக்கிறது. திடீரென ரயிலில் கண் விழிக்கும்போது வேறு ஒருவரது உடலுக்குள் தான்  இருப்பதை போல் உணர்கிறான். அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் கிறிஸ்டினா (மிச்செல்ல மோனஹன்) நீண்ட நாள் காதலனுடன் பழகுவதுபோல் பேசுகிறாள்.  வேறு ஒரு உடலுக்குள் எப்படி நுழைந்தேன், என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று தவிக்கும்போது ரயில் வெடித்து மரணம் அடைகிறான். ஆனால் அடுத்த கணம் வேறு ஒரு இரும்புக்கூண்டுக்குள் கண் விழிக்கிறான் கோல்டர்.

Source Code 2அவனுக்கு எதிரே ராணுவ அதிகாரியைப் போன்று ஒரு பெண் திரையில் தோன்றுகிறாள். வெடி விபத்து எப்படி ஏற்பட்டது, பாம் வைத்தது யார் என்று கேட்கிறாள். நான் எங்கே இருக்கிறேன், நீங்கள் யார், நான் கைதியாகிவிட்டேனா என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறான் கோல்டர். ஆனால் அந்தப் பெண் அதிகாரியோ உங்களுக்கு இன்னமும் எட்டு நிமிடங்கள் மட்டுமே நேரம்  இருக்கிறது, அதற்குள் அந்த ரயிலில் பாம் வைத்தவன் யார் என்று கண்டுபிடியுங்கள்  என்று தொடர்பை துண்டிக்கிறாள்.

Source Code 9மீண்டும் ரயிலில் கண் விழிக்கிறான் கோல்டர். முதன்முதலில் கண் விழித்தபோது நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மீண்டும் அப்படியே நடக்கின்றன. காதலி அதே டயலாக்கை மீண்டும் பேசுகிறாள். பக்கத்து சீட் பெண், ஷூவில் காபியைக் கொட்டுகிறாள். செக்கர் வந்து டிக்கெட் கேட்கிறார். சட்டென்று அந்த சூழலில் இருந்து எழுகிறான். பாம் வைத்தவன் நிச்சயம் வெடிக்கும் முன்பு ஸ்டேஷனில் இறங்கியிருக்க வேண்டும் என்று யோசிக்கிறான். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கும்போது இறங்குபவர்களை நோட்டம் விடுகிறான். சந்தேகப்படும் விதமாக ஒருவன் நகர்வதைப் பார்த்து, அவனை பிடிக்க முயல, அந்த நேரத்தில் ரயில் வெடிக்கிறது. மீண்டும் கூண்டுக்குள் கண் விழிக்கிறான்.

Source Code 6திரையில் தோன்றும் பெண் அதிகாரியிடம் மீண்டும் தனக்கு என்ன நிகழ்ந்தது, ஏன் இப்படி வேறு ஒரு உருவத்தில் இருக்கிறேன் என்று கேட்கிறான். ஆனால் அவளோ, முதலில் பாம் வைத்தவனை கண்டுபிடியுங்கள் என்று மீண்டும் அனுப்பிவைக்கிறாள். மீண்டும் எல்லா நிகழ்வுகளும் அப்படியே நடக்கிறது. இந்த முறை பாம் கண்டுபிடிப்பதைவிட்டு, தனக்கு என்ன நேர்ந்தது என்று கண்டுபிடிக்க முயல்கிறான்.

Source Code 7காதலி கிறிஸ்டினாவின் உதவியை நாடுகிறான். தன்னுடைய நண்பன் ஒருவனை கண்டுபிடிக்க வேண்டும் என்று அவனது ஒரிஜினல் பெயரைச் சொல்கிறான். தன்னை கைதுசெய்து வைத்திருப்பதாக நினைத்து, அந்த இடத்தில் இருந்து தப்பித்துச்செல்ல நினைக்கிறான். அவனது அப்பாவுக்கு போன் செய்ய முயல்கிறான். அப்போதுதான் கிறிஸ்டினா மூலம் உண்மை தெரியவருகிறது. அதாவது கோல்டர் போரின்போது இறந்தது தெரியவருகிறது. அந்த அதிர்ச்சியில் கோல்டர் நிற்கும்போது மீண்டும் வெடிக்கிறது ரயில்.

Source Code

இப்போது திரையில் தோன்றும் அதிகாரியிடம் தான் செத்துவிட்டதாக செய்தியை பரப்பிவிட்டு கைதியாக அடைத்துவைத்திருக்கிறீர்களா என்று கேட்கிறான். அதற்கு நேரடியாக பதில் சொல்லாத அதிகாரி, நீ பாம் வைத்தவனை கண்டுபிடித்தால் உனக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும் என்று சொல்கிறாள். மீண்டும் எட்டு நிமிடங்கள் நேரம் கொடுக்கிறாள்.

Source Code 10மீண்டும் ரயிலில் கண் விழிக்கிறான் கோல்டர். அவனது ராணுவ மூளை சுறுசுறுப்பாக செயல்படுகிறது. எந்தப் பக்கம் வெடித்தது என்பதை அறிந்து, அங்கே போய் பாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறான். அது செல்போனில் இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறான். செல்போன் பேசும் ஒருவன் மீது சந்தேகப்படுகிறான். அவனை விரட்டிக்கொண்டு போகும்போது, காதலியையும் ரயிலில் இருந்து கீழே இறக்கி கூட்டிச் செல்கிறான். அவன் தீவிரவாதி என்று நினைத்து அவனை அடிக்கும்போது மீண்டும் ரயில் வெடிக்கிறது.

Source Code 5திரையில் தோன்றும் அதிகாரியிடம், நான் டயம் டிராவல் செய்கிறேனா, குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டால் விபத்தை தடுத்துவிட முடியுமா என்று கேட்கிறான் கோல்டர். அப்போதுதான் நடப்பதை சொல்கிறார்கள். அந்த ரயிலில் இருக்கும் ஒரு நபரின் மூளையில் கோல்டரின் மூளையை புரோகிராம் செய்திருக்கிறார்கள். விபத்து நடப்பதற்கு எட்டு நிமிடங்கள் வரை, அந்த மூளையில் கோல்டரால் இருக்க முடியும். அந்த நேரத்திற்குள் குற்றவாளி யார் என்பதை அறிந்துகொண்டால், விபத்தை தடுக்கமுடியாது என்றாலும், குற்றவாளியை கைதுசெய்ய முடியும் என்கிறார்கள்.

Source Code 11இப்போது முழு மனதுடன் தீவிரமாக செயலில் இறங்குகிறான் கோல்டர். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறான். குற்றவாளியை மடக்கிப் பிடித்தபிறகு நடப்பதுதான் அற்புதம். ஆம், கோல்டர் வாழ்வில் அற்புதம் நிகழ்கிறது. போர்முனையில் செத்துப்போய், பாதி உடல் பகுதி இல்லாமல் ஆய்வுக் கூடத்தில் கிடக்கும் கோல்டருக்கு என்ன  நேர்கிறது  என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ச்சே, இதுவும் காலயந்திரம் கதையா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். அதிலும் புதுமை புகுத்தி, எதிர்காலத்தில் இப்படி ஒரு அறிவியல் வளர்ச்சி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் படமாக்கியிருக்கிறார்கள். ஓவர்டைம் போட்டு மூளையை கசக்கியிருக்கிறார்கள்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

பின்குறிப்பு :

* 2009-ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய,  மூன் படத்தை இயக்கிய டங்கன் ஜோன்ஸ் இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் இது.

* மிகமிக குறைந்த செலவில் படமாக்கப்பட்டு, உலக அளவில் மாபெரும் கலெக்‌ஷன் அள்ளிய திரைப்படம்.

* பத்து வயதில் இருந்து சினிமாவில் நடித்துவரும் ஜேக், டே ஆஃப்டர் டுமாரோ படத்தின் மூலம் பிரபலமானவர். சோடியாக், எவரெஸ்ட் போன்ற படங்களின் மூலம் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

முழு படத்தையும் பார்க்க:

https://www.youtube.com/watch?v=a_Ep4U2S6Zs

Source Code is a 2011 science fiction film directed by Duncan Jones, written by Ben Ripley, and starring Jake Gyllenhaal, Michelle Monaghan, Vera Farmiga, and Jeffrey Wright. Movie Review, Movie Review in Tamil, Review in Tamil, Tamil Review, Must Watch, Must See, Tamil Hollywood

(Visited 378 times, 75 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>