சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

eternal-sunshine

பாக்கவே பாக்காதீங்க – எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட்:

கிறுகிறுவென தலை சுற்றவைக்கும் நான் லீனியர் திரைக்கதை, மூன்றாவது முறை பார்த்தால் மட்டுமே புரியும் வகையில் நொடியில் மறையும் காட்சியமைப்பு, லேப்டாப் வைத்துக்கொண்டு மூளையை கட்டுப்படுத்துவதாக காதில் பூச்சுற்றும் கதை, ஆமை வேகத்தில் நகரும் திரைக்கதை போன்ற திகிடுதத்தங்கள் இருந்தாலும் எகிறும் ஐ.எம்.டி.பி. ரேட்டிங்கிறாக ஒரு படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்ற சினிமா கிறுக்கு உங்களிடம் இருந்தால் மட்டும் எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட் படத்தைப் பார்க்கலாம். மற்றவர்கள் கதையை மட்டும் படித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

eternal-sunshine10விதவிதமான நகைச்சுவை வேடங்களில் அசத்தும் ஜிம் கேரி காதல் நாயகனாக அவதாரம் எடுக்க… காதலிக்கு இலக்கணமாகத் திகழும் டைட்டானிக் கேட் வின்ஸ்லெட் நாயகியாக வருகிறார். இவர்களுக்கு இடையிலான காதல், மோதல், பிரிதல், சேர்தல், கோபம், சோகம் என அத்தனை சிக்கல்களையும் ஒன்றுசேர்த்து இடியாப்பம் செய்தால் அதுதான், எடர்னல் சன்ஷைன் ஆஃப் த ஸ்பாட்லெஸ் மைன்ட். நம்ம ஊர் படங்களில் ஒரு குத்தாட்ட பாட்டு வைப்பதுபோல், அவ்வப்போது வந்து கிளுகிளுப்பு காட்டிவிட்டுப் போகிறார் ஸ்பைடர்மேன் நாயகி கிர்ஸ்டன் டன்ஸ்ட்.

eternal-sunshine2ஒரு காதலர் தினத்தில் படம் தொடங்குகிறது. ரிசர்வ்ட் டைப் ஆசாமியான ஜிம் கேரி ரயிலில் ஏறி அலுவலகம் செல்வதற்கு தயாராக இருக்கிறான். திடீரென அவன் நினைவில் மான்டெக் செல்லவேண்டும் என்று தோன்றுகிறது. ஏன் என்று புரியாமல் அலுவலகத்திற்கு விடுப்பு போட்டுவிட்டு, மனம் சொல்லும் இடத்துக்குப் போகிறான். அங்கே போனபிறகு மேலும் தனிமையை உணர்கிறான் ஜிம். ஏன் இந்த இடத்துக்கு வந்தோம் என்று புரியாமல் தவிக்கும்போது, இவனைப் போன்றே தனிமையில் வந்திருக்கும் வின்ஸ்லெட்டை பார்க்கிறான். இருவரும் தனிமையில் சுற்றிவிட்டு ரயிலில் ஊர் திரும்புகிறார்கள்.

eternal-sunshine3சளசளவென பேசும் குணம் கொண்ட வின்ஸ்லெட், தனிமையில் இருக்கும் ஜிம்மிடம் பேசத் தொடங்குகிறாள். நிமிடத்துக்கு நூறு வார்த்தைகள் பேசும் வின்ஸ்லெட்டுக்கும் ஒரு வார்த்தை பேசுவதற்கே ஆயிரம் முறை யோசிக்கும் ஜிம்முக்கும்  நட்பு உருவாகிறது. அந்த நட்பு காதலாக மாறுகிறது, திருமணம் செய்துகொள்ளலாமா என்று யோசிக்கிறார்கள். ஒரு நிமிடம் இரு, என் வீட்டில் இருந்து டூத் பிரஷ் எடுத்துக்கொண்டு வருகிறேன் என்று காருக்குள் அமர்ந்திருக்கும் ஜிம்மிடம் சொல்லிவிட்டு போகும் வின்ஸ்லெட் திடீரென காணாமல் போகிறாள்.

eternal-sunshine7என்ன நடக்கிறது என்று புரியாமல் அவளைத் தேடிச் செல்கிறான் ஜிம். அங்கே வேறு ஒருவனை காதலிக்கும் வின்ஸ்லெட்டுக்கு, ஜிம் யார் என்பதே தெரியவில்லை. அவனை அந்நியனாகவே பார்க்கிறாள். கடுமையான கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்து மாத்திரை போடுகிறான் ஜிம். அவனை பின் தொடரும் ஒரு ஹைடெக் கும்பல், சட்டென அவன் வீட்டுக்குள் நுழைந்து, ஊசி போட்டு ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள்.

eternal-sunshine1தன்னை மறந்துவிட்டு துரோகம் செய்த வின்ஸ்லெட்டின் நினைவுகளை மறக்கவேண்டும் என்பதற்காக ஒரு ஏஜென்ஸியை அணுகியிருக்கிறான் ஜிம். அவர்கள்தான் ஜிம்மை மயக்கி, அவன் மூளைக்குள் நுழைந்து வின்ஸ்லெட் சம்பந்தப்பட்ட நினைவுகளை எல்லாம் அழிக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அவர்களின் செயல்பாடுகளை எல்லாம் மூளையைவிட்டு வெளியே வந்திருக்கும் ஜிம் பார்க்கிறான். அதாவது தன்னுடைய நினைவுகளை அழிக்கிறார்கள் என்பதை மயக்கத்தில் இருக்கும் ஜிம் உணர்ந்து, அதில் இருந்து தப்பிக்க நினைக்கிறான். வின்ஸ்லெட்டுடன் சண்டை போட்டது, பிரச்னை நடந்தது போன்ற கெட்ட நினைவுகளை அழிக்கும்போது அமைதியாக இருக்கிறான் ஜிம். அதேநேரம் அவளுடன் இனிமையான நினைவுகளை அழிக்கும்போது, கடுமையான வேதனைக்கு ஆளாகிறான். அதனால் மூளைக்குள் நினைவுகளை அழிக்கவிடாமல் தப்பித்து ஓடுகிறான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பழகிவிட்டு ஒரு சண்டையினால் வின்ஸ்லெட், அவள் மூளையில் இருந்து ஜிம்மின் நினைவுகளை அழித்துவிட்டாள் என்பது தெரியவருகிறது.

Eternal Sunshine of the Spotless Mind

வின்ஸ்லெட்டை கூட்டிக்கொண்டு தனது மூளையின் வெவ்வேறு பதிவுகளுக்குள் ஓடுகிறான் ஜிம். அந்த இடங்களுக்கு எல்லாம் அழிவுப்படையும் வருகிறார்கள். எப்படி இவர்களிடம் இருந்து நல்ல நினைவுகளை மட்டும் மீட்பது என்று ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் மூளைக்குள்ளேயே திட்டம் போட்டு செயல்படுத்துகிறார்கள். ஆனால், அத்தனை திட்டமும் பணால் ஆகிறது. கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் நிற்கிறார்கள். அப்போது ஜிம்மிடம் ரகசியமாக சொல்கிறாள் வின்ஸ்லெட். எத்தனை நினைவுகளை வேண்டுமானாலும் அழிக்கட்டும், நாளை காலை மான்டெக் என்ற இடத்துக்கு வந்துவிடு என்று சொல்கிறாள்.

eternal-sunshine9இந்த இடத்துக்குத்தான் படத்தின் முதல் காட்சியில் வந்திருக்கிறான் ஜிம். இதே இடத்துக்கு மீண்டும் வருகிறாள் வின்ஸ்லெட். இருவரும் மீண்டும் ஒருவருக்கொருவர் நட்பாகி, பழகி, காதலாகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்துகொள்வதற்கு இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால் காலமெல்லாம் காதலர்கள் என்ன செய்வார்கள் என்பது நமக்குத் தெரியும்.

ஆம், உண்மையான காதல் என்பது ஆயிரத்தெட்டு தடைகள் வந்தாலும் உடைத்துப்போட்டு முன்னேறிவிடும். எத்தனைமுறை நினைவுகளை அழித்தாலும் காதல் வயப்பட்ட மனசு மீண்டும் மீண்டும் காதலுக்குப் பின்னேதான் செல்லும் என்பதை அறிவியல்பூர்வமாக சொல்கிறார்கள்.

eternal-sunshine5காதல் எல்லாமே இப்படிப்பட்டதுதான் என்பதை சொல்வதற்கு வரும் கிளைக்கதைதான் அழகி கிர்ஸ்டன் சம்பந்தப்பட்டது. நினைவுகளை அழிக்கும் ஆராய்ச்சியாளராக இருக்கும் வயதான பாஸ் மீது காதல் கொள்கிறாள் கிர்ஸ்டன். அதனால் அவளது நினைவுகளை அழித்துவிடுகிறார்கள். உடன் பணியாற்றும் வேறு ஒருவன் மீது காதல் ஏற்பட்டு, அது கெட்ட சமாச்சாரம் செய்யும் வரையில் போனாலும், தாத்தாவை நெருங்கியதும் மீண்டும் காதல் வசப்படுகிறாள்.

eternal-sunshine8அதாவது காதல் அழிவதில்லை என்பதை விஞ்ஞான பார்வையில் பார்த்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகள் ஜிம்மின் மூளைக்குள் நடப்பதாக காட்டப்படுவதும், அதில் இருந்து அவன் தப்பிக்க முயல்வதும் நம் மூளையைக் குடையும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. கதையாகப் பார்க்கும்போது சிறப்பாகத் தெரிந்தாலும் பொறுமையை சோதிக்கவைக்கும் படம். சினிமாவை தெய்வமாக மதித்துப் பார்ப்பவர்கள் மட்டும் டிவிடி தேடி பார்க்கலாம்.

கொஞ்சம் ரசிக்க டிரைலர் :

https://www.youtube.com/watch?v=3y3-To54R8E

பின்குறிப்பு :

* அலெக்‌சாண்டர் போப் எழுதிய ஒரு பாடல் வரிகளில் இருந்து இந்தப் படத்தின் நீளமான தலைப்பு தேடி எடுத்திருக்கிறார்கள். கவிதைத்தனமான இந்தத் தலைப்புக்கு அர்த்தம் தலையை சுற்றவைக்கும் வேதனை.

* பிரெஞ்ச் ஃபிலிம் இயக்குனரான மைக்கேல் கான்ட்ரி கதையாக்கத்தில் உதவிபுரிந்து படத்தை இயக்கி மாபெரும் வெற்றியடைய செய்திருக்கிறார்.

*  நிக்கோலஸ் கேஜ் நடிப்பதாக இருந்த வேடத்தில் அறைகுறை மனதுடன் நடிக்க சம்மதித்தாராம் ஜிம் கேரி.

Eternal Sunshine of the Spotless Mind is a 2004 American romantic science-fiction comedy-drama film about an estranged couple who have erased each other from their memories, written by Charlie Kaufman and directed by Michel Gondry. The film uses elements of science fiction, psychological thriller, and a nonlinear narrative to explore the nature of memory and romantic love.Kaufman and Gondry wrote the story with Pierre Bismuth. The ensemble cast includes Jim Carrey, Kate Winslet,Kirsten Dunst, Mark Ruffalo, Elijah Wood and Tom Wilkinson. It won the Academy Award for Best Original Screenplay and has a cult following.

(Visited 427 times, 164 visits today)

Related posts

One thought on “சினிமா கிறுக்கு இருக்கா? – Eternal Sunshine of the Spotless Mind

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>