டேய் அப்பா லைஃப் இஸ் பியூட்டிஃபுல் பாருடா

life-is-beautiful-blu-ray-

அம்மாவின் பாசத்தைச் சொல்வதற்கு உலகெங்கும் ஆயிரத்தெட்டு திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்கும் மகனுக்குமான உன்னதமான பாசத்தை மெய்சிலிர்க்கச் சொல்வதில் சந்தேகம் இல்லாமல் முதல் இடம், ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ (La vita è bella/Life Is Beautiful) என்ற இத்தாலி மொழிப் படத்துக்குத்தான்.

Life is Beautiful6

கதாநாயகனாக நடித்து இயக்கியிருப்பவர் ராபர்ட் பெனிக்னி. ஜெர்மனியின் நாஜிப்படை  நடத்திய சித்திரவதைக் கூடத்தில் நடக்கும் கொடுமைகளை நகைச்சுவை உணர்வுடன் படமாக்கமுடியும் என்பதையும், அந்த நகைச்சுவை மூலம்  ஆழ்ந்த சோகத்தை விதைக்கமுடியும் என்பதையும் உலகிற்கு நிரூபித்துக் காட்டிய படம். சாப்ளின் இயக்கிய, ‘தி கிட்’, ‘தி கிரேட் டிக்டேட்டர்’ போன்ற படங்களின் சாயல் ஆங்காங்கே தென்பட்டாலும் இந்தப் படத்தின் நாயகனின் அன்புக்கு இணையாக எந்தக் காதலனையும் சொல்லமுடியாது.

Life is Beautiful2வழக்கமான வணிக  சினிமாக்களில் நிகழ்வதுபோல், ஒரு  மோதலில்தான் நாயகி நிகோலாவை சந்திக்கிறான். ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய்யவேண்டும் என்ற நம் தமிழ் பழமொழியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நேரத்துக்கு ஏற்ப ஒரு பொய் சொல்லி நாயகியை சந்திக்கிறான். பெனிக்னியின் நகைச்சுவை உணர்வையும் காதல் விருப்பத்தையும் உள்ளூர ரசிக்கிறாள் நிகோலா. ஆனால் அவன் காதலை மனப்பூர்வமாக சொல்லும்போது, காதலை ஏற்றுக்கொள்ளாமல் அமைதி காக்கிறாள்.

அடுத்த காட்சியிலேயே  நிகோலாவுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அதுவரையிலும் தடுமாறிய மனநிலையில் இருக்கும்  நிகோலா, நிச்சயதார்த்த நேரத்தில் நாயகனின் உற்சாகத்தைக் கண்டு உறுதியான முடிவெடுக்கிறாள். ‘ஓடிப்போலாமா?’ என்று நாயகனிடம் கேட்க… இருவரும் பறவைகளைப் போல் தப்பிக்கிறார்கள். இவர்கள் ஆனந்தமான காதலுக்கு சாட்சியாக குட்டிப்பையன் ஜோஸ்வா பிறக்கிறான். சந்தோஷமாக போகும் வாழ்க்கையின் குறுக்கே உலகப்போர் நுழைகிறது.

Life is Beautiful1

யூதர் என்ற காரணத்தாலே பெனிக்னியும் அவனுடன் சேர்த்து ஜோஸ்வாவும் ஜெர்மன் படையினரால் கைது செய்யப்படுகிறார்கள். எந்த ஒரு துன்பமும் தன் மகனுக்கு தெரியக்கூடாது என்று நினைக்கிறான்  பெனிக்னி.   நாஜிப்படையின் கொடூரத்தை  தன் பிள்ளைக்குத் தெரியாமல் மறைப்பதற்காக,  ‘இங்கே ஒரு விளையாட்டு நடக்கிறது. பசி, கொடுமை, சித்திரவதை போன்றவற்றை தாண்டி நிறைய மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு ஒரு பீரங்கி பரிசாகக் கிடைக்கும். அதனால் எதற்காகவும் கலங்கக்கூடாது’  என்கிறான். அப்பா சொல்வதை அப்படியே நம்புகிறான் ஜோஸ்வா.

Life is Beautiful4

கைது செய்யப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்படுவதையும், பசியால் பாதிக்கப்படுவதையும், கொட்டிலில் அடைக்கப்படுவதையும் விளையாட்டு என்றே நம்புகிறான் ஜோஸ்வா. தன்னுடைய மகனும் கணவனும் கைது செய்யப்பட்டது தெரியவர, நிகோலாவும் கைதாகி சிறைக்குள் வருகிறாள். நீராவிக் குளியலில் கொத்துக்கொத்தாக ஆட்கள் கொல்லப்படுவதைக் கண்டு நிகோலா மனம் பதைக்கிறாள். கணவனையும் மகனையும் எப்படியும் காப்பாற்றத் துடிக்கிறாள்.

Life is Beautiful5

ஆனால் வரிசையாக ஆட்கள் கொல்லப்படுகிறார்கள். அவர்களிடம் இருந்து மகனை காப்பாற்றி ஒரு பெட்டிக்குள் அடைத்துவைக்கிறான். மனைவியைக் காப்பற்ற முயலும் பெனிக்னியைப் பிடித்து துப்பாக்கி முனையில் கொல்வதற்காக கொண்டு செல்கிறார்கள். இதனை  பெட்டிக்குள் இருந்து ஜோஸ்வா பார்ப்பதை அறியும் பெனிக்னி, இதனையும் மகன் விளையாட்டு என்று உணரவேண்டும் என்பதற்காக  லெட்ஃப், ரைட் போட்டு நகைச்சுவையாக நடந்து மறைகிறான். துப்பாக்கி வெடித்து ஓய்கிறது.

திடீரென காலம் மாறுகிறது. நாஜிக்களின் படை பின்வாங்குகிறது. அம்மாவைக் கண்டுபிடிக்கும் ஜோஸ்வா, அப்பா ஜெயித்துவிட்டதாகச் சொல்லி சந்தோஷப்படுகிறான்.  பீரங்கி வண்டியில் ஏறி ஊருக்குப் பயணிக்கிறான்.  இது அப்பா ஜெயித்த பீரங்கி என்று ஜோஸ்வா நம்ப…  அவன் கனவை கலைக்கமுடியாமல் உறைந்துபோய் பார்க்கிறாள் நிகோலா. நமக்கும் ரத்தம் உறைகிறது.

அடுத்த நொடியில் மரணம் சம்பவிக்க இருக்கும் நிலையிலும், மகனின் கண் முன்னே சந்தோஷமாக நடந்துசெல்லும் பெனிக்னியின் பாசம் மேன்மையானது என்பதால், காலம் கடந்தும், மொழி கடந்தும் பேசப்படுகிறது, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’.

https://www.youtube.com/watch?v=GCc2amcxwlA

(Visited 235 times, 25 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>