சிவாஜி கணேசனுக்கு அவமானம்!

Sivaji Ganesan TH

அன்னை இல்லத்தை மணி மண்டபம் ஆக்கலாமே…

ஆளும் அ.தி.மு.க-வை தவிர அத்தனை கட்சிகளும் சேர்ந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டியே தீரவேண்டும் என்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

Sivaji Ganesan autobiographyfrontcover THஇந்தியாவின் மாபெரும் சினிமா கலைஞனை, இதைவிட யாராலும் கேவலப்படுத்த முடியாது. விருது, புகழ், பணம் எல்லாம் தானாக வரவேண்டுமே தவிர, தேடிப்போகக் கூடாது என்பதில் சிவாஜி கணேசனே உறுதியாக இருந்தவர். இன்று அவரது பெயரைச் சொல்லி, அவ்வப்போது காமெடி ஷோ நடத்துகிறார்கள். மணி மண்டபம் மட்டுமல்ல, அதைவிட அற்புதமான மியூசியம் அமைப்பதற்கே தகுதியான நபர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் இந்த விஷயத்துக்காக அரசாங்கத்தைக் கெஞ்சத்தான் வேண்டுமா?

சிவாஜி கணேசனுக்கு பிறந்த நாள் அல்லது மறைவு நாள் வரும் நேரத்தில் மட்டும்தான் நம் கலைஞர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தக் கோரிக்கை நினைவுக்கு வரும் என்பதுதான் வேடிக்கை. அதன்பிறகு சிவாஜி கணேசனை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்.

சினிமா கலைஞனாக மட்டுமல்ல, ஒரு சாதாரண அடிமட்ட ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து மேல்வர்க்கத் தலைவனாக உருமாறிய வகையில், சிவாஜி ஒரு வகையில் சரித்திரம் படைத்த சாதனையாளர். ஒருசில சினிமா கலைஞர்களைப் போன்று தவறான முடிவுகள் எடுத்து சொத்துக்களை எல்லாம் இழந்தவர் அல்ல. அவரது வாரிசுகளும் தொடர்ந்து கலைத்துறையில் ஈடுபட்டு நல்ல முறையில் சம்பாதிக்கிறார்கள். அதனால் ரசிகர்கள் இப்படி ஒரு மணிமண்டபம் எதிர்பார்க்கிறார்கள் என்றால், அதனை நிறைவேற்றித் தரவேண்டியது சிவாஜி குடும்பத்தினர்தான்.

இப்போது சிவாஜி வசித்துவந்த அன்னை இல்லத்தை கடந்துசெல்லும் சினிமா ரசிகர்கள், அங்கே சிவாஜி வாழ்வதாகத்தான்  பார்க்கிறார்கள். அங்கேயே ஒரு மணி மண்டபம் கட்டி, சிவாஜியின் அத்தனை சினிமாக்களையும் ஆவணங்களாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கலாம். அதனால் அன்னை இல்லத்தில் நுழையும் ஒவ்வொரு ரசிகனும் ஆனந்தப்படுவான் என்பதில் சந்தேகமே இல்லை. இதற்கு பணம் செலவழிக்க சிவாஜி குடும்பத்தினர் தயாராக இல்லை என்றால், உண்ணாவிரதம் இருக்கும் கட்சியினர் கொடுத்து உதவலாம். போராட்டம் நடத்தும் சினிமா சங்கத்தினர் உதவி செய்யலாம். அவர்களும் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைக்கலாம்.

ரசிகர்களை சினிமா கலைஞர்கள் ஏமாற்றி இருக்கலாம். ஆனால் சினிமா கலைஞர்களை தமிழ் ரசிகர்கள் கைவிட்டதாக சரித்திரமே இல்லை. அதனால் சிவாஜி மணி மண்டபத்துக்காக இனி யாரும் அரசிடம் கோரிக்கை வைத்து, அந்த மாபெரும் கலைஞனை அவமானப்படுத்த வேண்டாமே…

Sivaji, Sivaji Ganesan, memorial, Manimandapam, politics, Nadigar Thilagam, Tamil Hollywood

(Visited 214 times, 9 visits today)

Related posts

Leave a Comment

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>